Monday, January 7, 2008

பரா மாஸ்டருக்கு அஞ்சலி

இந்த நாட்கள் எனது நண்பர்களும் தோழர்களும் உதிருகிற காலமாகி மிகுந்த சோகம் தருகிறது. ஒவ்வொரு அஞ்சலி எழுதுகிற போதும் கால நதி எங்களதும் எங்கள் தந்தையரதும் தலைமுறைகளின் காலடி மண்ணை ஓயாமல் வாரிச் செல்கிறதைத் துயரத்துடன் உணர்கிறேன்.
தோழர்கள் குகமூர்த்தி, சசி கிருஸ்ணமூர்த்தி, சார்ல்ஸ் அபயசேகர, எம்.எஸ்.எம். அஸ்ர்ப், சிவராம், சுந்தரராமசாமி, கலைச்செல்வன், வில்வரத்தினம், புஸ்பராசா, அன்ரன் பாலசிங்கம், பராமாஸ்டர் என நம்பிக்கையுடன் சூரியனைத் தேடி எதிர் புதிர் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்த தோழமைக்கு இனிய பலர் தமது பயணம் முடியாமலே பாதிவழியில் உதிர்ந்துபோனார்கள்.

பராவின் நினைவு எனக்கு 1970 பதுகளின் பிற்பகுதியில் இன ஒடுக்குதலுக்கு எதிராகப் பரந்த தளத்தில் இயங்கிய மேர்ஜ் (MIRJE- Movement for Inter-Racial Justice and Equality-இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பு) அமைப்பின் செயற்பாட்டாளர்களை நினைவு படுத்துகிறது.

அந் நாட்களில் இலங்கைத் தீவு எங்கும் பால், இனம், மதம் கடந்து எங்கள் தலைமுறையின் முற்போக்காளர் பலர் ஏதோ ஒரு வகையில் மேர்ஜ் அமைப்புடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள். தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் பொது நலன் கருதி, மனித உறவுகளும் உரையாடல்களும் தொடரமுடியும்; தொடரவேண்டும் என்கிற சேதியை நவீன யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்ததில் மேர்ஜ் அமைப்புக்கு பெரும் பங்கிருக்கிறது. மேர்ஜ் பதாகையின் கீழ் இன ஒடுக்குதலை நிராகரித்தும் அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம்,மலையக முற்போக்காளருடன் நாமும் அணிதிரண் டெழுந்த அந்த நாட்கள் இப்போதும் கிளர்ச்சி தருகிறது. அந்த மகத்தான எழுச்சியின்
முகங்களாக வடகிழக்கில் வண.பிதா ஜெயசீலனும் அமரர் வண. பிதா சந்திரா பெர்னாண்டோவும், அமரர்கள் வணசிங்கா மாஸ்டர்ரும் அண்ணாமலையும் விமலேஸ்வரனும் பரா மாஸ்டரும் இருந்தார்கள். அவர்களுக்கு உறுதுணையாக நானும் எனது நண்பர்களும் இருந்தோம்.
[Photo]
‚மேர்ஜ் பண்பாடு’ என்பது கண்டியில் இருந்து செயற்பட்ட வண. கத்தோலிக்க பிதா போல் கஸ்பஸ் அவர்களது கனவுகளின் செயல் வடிவமாகும். என் வாழ்வில் சந்தித்த நம்பிக்கை தருகிற கனவுகள் நிறைந்த மனிதர்களுள் அவரும் ஒருவர். அவரது கனவை நனவாக்குவதில் சார்ள்ஸ் அபயசேகரவும் வண. பிதா ஜெயசீலனும் பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் சுனந்த தேசபிரியாவும் வழக்கறிஞர் சிவபாலனும் தீவிரமாக உழைத்தார்கள். இலங்கைத்தீவடங்கிலும் எஞ்சியிருந்த நன்னம்பிக்கைகள் மேர்ஜ் பண்பாடாகத் திரட்டப்பட்டது. மறைந்த சூரியனைப்போல அந்தப் பண்பாடு மீண்டும் ஒருநாள் உதயமாகும்.


1970பதுகளின் பிற்பகுதியில் வண. பிதா ஜெயசீலனின் ஒருங்கிணைப்பில் செயற்பட்ட மேர்ஜ் குழுக் கூட்டம் ஒன்றிலேயே தோழர் பரா எனக்கு அறிமுகமானார். மாக்சிய ரொட்ஸ்கிய கோட்பாட்டாளரும் தொழிற்சங்கவாதியும் மேர்ஜ் குழுவின் முன்னணிச் செயற்பாட்டாளருமாக இருந்த தோழர் பராவை எனக்கு முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்தது வண. பிதா ஜெயசீலனா, நித்தியானந்தனா, அல்லது நிர்மலாவா என்பது எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. அப்பொழுது நான் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராகவும் மேர்ஜ் குழுவின் ஆதராவாளனாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். இருந்தும் நாங்கள் 1977-78 க்களின் பிற்பகுதியில் ஜெயவர்த்தனாவின் அவசரகால ஆட்சி கொடுமைகளின் போதுதான் மிகவும் நெருக்கமானோம். சிங்கள அரச இராணுவம் இன்பம் செல்வமென தலை நிமிர்ந்த பல தமிழ் இளைஞர்களைப் பட்டியலிட்டுக் கடத்திச் சென்று, கொன்று காகங்களுக்கும் நாய்களுக்கும் இரையாக வீசப் பட்ட அந்த இருண்ட நாட்களில் மேர்ஜ் குழுவைச் சேர்ந்தவர்களே எங்கள் கைவிளக்காக இருந்தார்கள். வண. பிதா ஜெயசீலனின் தேவாலயம், யாழ் பல்கலைக் கழகம் மற்றும் பரா-மல்லிகா; நித்தி -நிர்மலா போன்றவர்களது வீடுகளும் தான் எம்போன்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரது புகலாக இருந்தன.
நெருக்கடிகளில் இந்த வாசல்கள்தான் எங்களுக்காகத் திறந்திருந்தன. இந்தக் கூரைகளின் கீழ் தேனீர் அருந்தியபடி அன்றைய வரலாற்றின் மிக முக்கியமான விடயங்களை நாங்கள் கையாண்டிருக்கிறோம். இதில் ஆச்சரியமானவிடயம் நாங்கள் அனைவருமே மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள் என்பதுதான்.

துரதிஸ்டவசமாக அந்தக் கலாசாரம் இன்று இல்லாதொழிந்து போயிற்று. தமிழரது விடுதலைப் போராட்டம் எதிர் நோக்குகிற மிகப் பெரிய நெருக்கடி இதுதான்
என்று கருதுகிறேன்.

நாங்கள் எல்லோரும் 1970 களின் பின்பகுதியில் இருந்து மனித உரிமைக்கான போராட்டங்களில் அசாத்திய துணிச்சலுடனும் தீவிரமாகவும் செயற்பட்டோம். 1980 களில் மலைய மக்கள் பற்றிய கள ஆய்வுகளை மேற்கொள்ள நான் ஹட்டன் சென்றுவிட்டேன். பின்னர் முஸ்லிம் மக்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தேன். 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் இந்தியா சென்றுவிட்டேன். 1987ல் இந்திய இராணுவ நடவடிக்கைகளின்போது மேர்ஜ் இயக்கம் மீண்டும் தீவிரமாக இயங்கியபோது நான் வண. பிதா ஜெயசீலனுடன் சேர்ந்து பணியாற்றினேன். அந்தக் கால கட்டத்தில் பரா மாஸ்டர் அவர்கள் ஐரோப்பா சென்றுவிட்டதை அறிந்தேன். அதன் பின்னர் அவரை 1989 ஆம் ஆண்டு சுசீந்திரனின் அழைப்பின்பேரில் ஆறாவது இலக்கியச் சந்திப்பிற்காக பெர்லின் சென்றபோதுதான் மீண்டும் பார்த்தேன். அப்பொழுது இலக்கியச் சந்திப்பு ஒரு பரந்த ஜனநாயகத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தமை மகிழ்ச்சி தந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட மூன்று அல்லது நாலு சந்திப்புக்களைவிட பெர்லின் சந்திப்பின் போது எங்களிடையே நடைமுறை அரசியல் சார்ந்து அதிக இணக்கப்பாடு இருந்தது என்று கருதுகிறேன். எனினும் முரண்பாடுகளுக்கு வெளியில் நம் தோழமை விட்ட இடத்தில் இருந்து மீள ஆரம்பித்ததையும் இத் தருணத்தில் நினைவு கூர வேண்டும். முரண்பாடுகளோடும் பொதுவிடயங்களில் ஒருமைபட்டுச் செயல்படுகிற வெளி எப்பவும் அவரைச் சுற்றிப் பரந்து கிடந்தது. கருத்து வேறுபாடுகளுடனும் மனிதர்கள் மீது அக்கறையோடு பொதுப் பிரச்சினைகளில் ஒருமைப்பட்டுச் செயற்படுதலும் நட்பைப் பேணுதலும் என்கிற மேர்ஜ் பண்பாட்டை அவர் தொடர்ந்தும் கடைப் பிடித்தார். பழைய மேர்ஜ் தோழர்கள் என்ற முறையில் நித்தியானந்தனையும் என்னையும் சந்தித்ததில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

புலம் பெயர்ந்த தேசிய வாதிகள் பொதுவிடயங்களில் இணைந்து செயற்படுகிற எங்கள் விடுதலைக்கு மிக அவசியமாய் இருக்கிற பண்பை தோழர் பராபோன்ற புலம் பெயர்ந்த மேர்ஜ் நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவர்களை எதிர்த் திசைகளில் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருந்துவிட்டார்கள்.

நமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மட்டத்தில் வாய்ப்புகளை இழந்து வருவதற்கு இந்த அணுகுமுறையும் முக்கியமான ஒரு காரணமாகிறது. இந்தப் பிழையான அணுகுமுறை திருத்தப் படவேண்டும் என்கிற சிந்தனையும் கவலையும் மேர்ஜ் நண்பர் ஒருவரின் பிரிவின்போது ஏற்படுவது இயல்பானதே. பரா மாஸ்டரின் பிரிவினால் துயருறும் அவரது தோழர்களுக்கும் அவரது மனைவியார் மல்லிகாவுக்கும் பிள்ளைகள் உமா, சந்தூசுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
visjayapalan@gmail.com

No comments: