Sunday, January 20, 2008

போய்விடு அம்மா வ.ஐ.ச.ஜெயபாலன்

போய்விடு அம்மா
வ.ஐ.ச.ஜெயபாலன்

காலம் கடத்தும் விருந்தாளியாய்
நடு வீட்டில்
நள்ளிரவுச் சூரியன்
குந்தியிருக்கின்ற
துருவத்துக் கோடை இரவு.

எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன
கணவர்களைச் சபித்தபடி வருகிற
இணையத்துத் தோழிகளும் போய்விட்டார்.
காதலிபோல் இருட்டுக்குள்
கூடிக் கிடந்து
மலட்டு மனசில்
கனவின் கரு விதைக்கும்
தூக்கத்துக்கு வழிவிட்டு
எழுந்து போடா சூரியனே.
பாவமடா உன் நிலவும்
கணணியிலே குந்தி
இணையத்தில் அழுகிறதோ

மூன்று தசாப்தங்கள்
தூங்காத தாய்களது
தேசத்தை நினைக்கின்றேன்.
படை நகரும் இரவெல்லாம்
சன்னலோரத்துக் காவல் தெய்வமாய்
கால்கடுத்த என் அன்னைக்கு
ஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை.
பாசறைகளை உடைத்து
உனக்குப் புட்பக விமானப் பாடை
இதோ எடுத்துக்கொள் அம்மா
என் கவிதையின் தீ
போய் வா.

புதை குழிகளின் மேல்
இடிபாடுகளின்மேல்
பறங்கிக்குப் பணியாத என்
மூதாதையரின் சுவடுகளில்
பாலகர் சிந்திய இரத்ததின்மேல்
நம்பிக்கைப் பசுமையாய்
மீந்திருக்கிற
பனந்தோப்புகளின்மேல்
ஆலயங்கள், மசூதிகள் நிமிரும்
எங்கள் கிராமங்களின்மேல்
ஒரு யூட்டோபியாவில் இருக்கிற
என் தேசத்தின் கனவுகளை
மீட்டுவர வேண்டும்.

No comments: