Wednesday, January 2, 2008

வாசனை

வாசனை
--- வ.ஐ.ச.ஜெயபாலன்

அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது
அவளது வாசனையை உணர்ந்தேன்.

நாங்கள் பிரிந்தபோது
வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்
ரொறன்ரொவை நீங்கின.
ஒன்ராறியோ ஏரியின்மீது
தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்
கண்ணீரை மறைத்தபடி
நாம் விடைபெற்றோம்.

அந்த வசந்தத்தில்
சினைப் பிடித்த சமன் மீன்கள் நீந்திய
ஒன்ராறியோ ஏரிக்கரையின்
எந்தச் செடிகளை விடவும்
பூத்துப்போயும்
வாசனையோடும் என் படகில் இருந்தாள்.

படகை விட்டு இறங்கும்போது
ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.
நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்
சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.
வானை வெண்பறவைகள் நிறைத்தன.
ஒருகணம் போர் ஓய்ந்தது.
வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்
மங்களப் பாடலும்
பாங்கொலியும் கேட்டேன்.
மீன்பாடும் முழு நிலவில்
அவள் கமழும் ஒரு படகு
நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.

எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்
நாங்கள் இழந்த
விருந்துகளையும் கந்தூரிகளையும்
மட்டுநகர் வாவியையும்
அவர்களாவது மகிழட்டும் என்றாள்.
வெல்க பெடியள் என்றேன்.
வெல்க நம் பெட்டையள் என்றாள்.
கைகோர்த்தும் இருவேறுலகம்.

நாங்கள் பிரிந்தபோது
மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.
கறுப்பு அணில்கள்
எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து
ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.
ஒவ்வொரு தடவையும்
சுவர்க்கங்களைத் தாண்டி
நினைவுகளில் முடிந்த
வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்
மேப்பிள் சருகுகள் மிதிபட
உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.
ஸ்காபரோவில் பசித்திருந்த
கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்
கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.

உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல
என் நினைவுகளின் அடுக்கில்
அவள் தனது
இறுதி அணைப்பின் வாசனையை
இப்படித்ததன் விட்டுச் சென்றாள்.

No comments: