Thursday, February 14, 2008

தேம்ஸ் நதியின் புன்னகை

தேம்ஸ் நதியின் புன்னகை
வ.ஐ.ச.ஜெயபாலன்

பாலத்தின்கீழே
வாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது
`நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை
கண்ணாடியாய் நெழிய
அன்னங்களின் கீழே
நீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ்.


மென்காற்றில் குனிந்து
வசந்தப் பூ முகம் பார்க்க நெரியும்
கரையோர மரங்களின்கீழ் நடந்துவந்தோம்.
கழுத்தை நெழித்து சிறகை அகட்டி
நீர்மீது ஓடி வான் எழுந்த
அன்னப் பறவை ஒன்றின் கர்வத்தோடு
மோனத் தவத்தில் முகில்களின்மீது
எந்தன் கவிமனசு.
சிறுமியோ நனவுகளின் புல்வெளியில் நடக்கின்றாள்.


நானோ தேம்ஸ் அமைதியின் தேவதை என்றேன்.
”என் அம்மா மாதிரி நம்ப முடியாதவள் மாமா” என்று
அந்தச் சிறுமி உன்னைக் கிண்டல் செய்தாள்..
இதே தேம்ஸ் இதே இதே இதே தேம்ஸ்
வெறிகொண்டு வெள்ளப் பெருக்காய் எழுந்து வந்து
எங்கள் வீட்டு வேலிக்கு உதைத்ததை
நம்புவாயா மாமா எனக் கேட்டாள்.
சின்ன வயதில் உணவுமேசையில்
அடம்பிடித்தபோதெல்லாம்
சாப்பிடு இல்லையேல் தேம்ஸ் நதி மீண்டும்
வீட்டுக்கு வந்திடும் என்று
அம்மா மிரட்டுவாள் என்று சிரித்தாள்
அந்த தேம்ஸ் நதிக்கரையின் நனவான பெட்டை.


ஆயிரம் ஆயிரம் `டாண்டிலியன்கள்` பூத்த
நதிக் கரைப் புல்வெளியில்
அகாலமாய் முற்றி விதைப் பஞ்சான
பூக்களைத் தேடிப் பறித்துப் பறித்து
காற்றினில் ஊதிக் களித்தபடி
பூகளின் தேனையும்
வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளையும்
விலகி விலகி நடக்கிறாள்.
முகில் மலைகளையும் புல் மேடுகளையும்
விலகி விலகி வருகின்ற தேம்ஸ் நதியே
அவள் உன்னுடைய கபிலநிறச் சிற்றருவி.


எப்போதும் தயாராக உனது கதைகளை
தன் இளைய மனம் நிறைத்து வைத்துள்ளாள்.
கொஞ்சக்காலம் இங்கிலாந்தின் மலக்குடலாய்
நாறிய தேம்ஸ் நதி
இன்று துய்மையில் உயிர்த்து
மீண்டும் இங்கிலாந்தின் புன்னகையாய் நெழிகிறதாம்.
இல்லாதுபோன மீன்களும் நீர்நாய்களும்
மீண்டு வந்துவிட்டது மாமா என்று
வீட்டுக்குத் தோழிகள் வந்ததைச் சொல்வதுபோல்
சொல்லிக் குதூகலித்தாள்.
.

பார் முன்னும் பின்னும் அப்பா அம்மா அன்னங்கள்
பாதுகாப்பாகக் குஞ்சுகள் நடுவே பார் என்று
நேர்கோட்டில் அணி பெயர்ந்த
அன்னக் குடும்ப அழகைக் காட்டியபோது
மலாரா முகத்துடன்
”அன்னங்கள் நல்ல பெற்றோர்கள்” என்றாள்.
இரண்டும் ஒன்றாகக் கூடுகட்டி
இரண்டும் ஒன்றாக முட்டைகளை அடைகாத்து
பாருங்கள் மாமா
இரண்டும் ஒன்றாகக் குஞ்சுகளைப் பேணுகிற பேரழகை
என்கிற போதவள் குரலுடன் மனசும் உடைந்தது.
அப்பா அம்மா பிரிந்தபோது நான்
இக்குஞ்சுகள்போலச் சிறுமி என்றாள்.
பாட்டிதான் என்னை வளர்த்தது என்றாள். .


தேம்ஸின் இரைச்சல் பிடிக்கும் மாமா
என்றவள் கரங்களைப் பற்றி
நதி இரையவும் புலம்பவும் இல்லை என்றேன்.
நதிகள் எப்பவும் காலத்தெருவின்
நாடோடிப் பாடகர்கள் என்றேன்.


தேம்ஸ் நதியின் ஒவ்வொரு திவலையும்
ஒவ்வொரு காலத்தின் பாடலை இசைக்கிறது
சில ரோமானியப் படைகளை எதிர்த்து
ஆங்கில ஆதிவாசிகள் பாடிய
எழுச்சிப் பாடல்களுடன் செல்லும்
வேறுசிலதோ
பைபிளோடு வந்தவர்களின்
முதல் பாடலைப் பாடும்.
இன்னும் சில இசைப்பதோ
இரத்தம் தோய்ந்த வாழ்களோடுயர்ந்த
நாடாளுமன்ற வாதிகளின் போர்ப் பாடல்.
எங்கள் மூதாதைரிடம் யுத்தத்தைக் கொடுத்துவிட்டு
வாழ்வைச் சுருட்டிக்கிக் கொண்ட
கிழக்கிந்தியக் கம்பனியாரின்
மமதைப் பாடலும் ஒலிக்கிறதடி என்றேன்.
குளோப் அரங்கின்முன் தரித்துக் கேட்ட
சேக்ஸ்பியரின் காதல் பாடல்களை
இந்த மாநதி இசைக்காத நாளுமுண்டோ.
காவிரிக் கரையில் மாதவிபாடிய
கானல் வரிகளாய்
காலமெல்லாம் நதிகள் இடத்தில் ததும்புகிற
முடிவிலிக் கீதம்
கரையோரங்களில் நாயகர் நாயகிகள் விட்டுச்செல்கிற
காதல் பாடல்கள்தான் என்றேன்.


பெருகு பெருகு தேம்ஸ் நதியாகப் பெருகு
என் கை பற்றிய சின்ன நதியே பெருகு
பெருகு போரின் மாசுகள் அகன்று பெருகு என்றேன்.
உன் நாட்களிலாவது நமது தாய்நாட்டுக்கு
சமாதானம் வரட்டும் என்றேன்.
பீரங்கிக் குழலாய் சிதைகிற எங்கள் கனகராயன் ஆறும்
மீண்டும் வந்து பறவைகள் பாட
மீண்டும் உயிர்த்து மீன்கள் துள்ள
நடக்கட்டும் வழிய என்றேன்.
மீன்களும் பறவைகளும் மின்ன
ஈழத்தின் புன்னகையாய் நெழியட்டும் வாழிய என்றேன்.


அவளுக்கு எங்களூர்ச் சிற்றாறை தெரியவில்லை.
என்தாய்நாடு இங்கிலாந்துதானே மாமா என்றாள்.
சற்று நேர மெளவுனம் குலைய
ஆனால் ஒன்று செய்யலாம் என்றாள்.
வளர்ந்ததும் தேம்ஸ் நதியின் துடைப்பங்களோடு
என் பாட்டி நாட்டின்
சிற்றாறுகளைப் பெருக்க வருவேன் என்றாள்.
தேம்ஸ் நதியே தேம்ஸ் நதியே
உன்னை உயிர்ப்பித்த அமுதங்களை
போர் குதறிய எங்கள் சிற்றாறுகளுக்கும் தா என்றேன்.
என்னைக் காதல் வசப் படுத்திய தேம்ஸ்
அந்தச் சிறுமியில் புன்னகையாய் நெழிந்தது.

* 1642 ஆண்டு இந்ங்கிலாந்தின் உள்ள்நாட்டுப்போரில் கேம்பிறிஜ் நாடாளுமன்ற உறுப்பினர் குறொம்வெல் (Oliver Cromwell 1599 - 1658) தலைமையில் சாள்ஸ் மன்னனுக்கு எதிராக எழுந்த படை.
** தேம்ஸ் நதியின் தென் கரையில் 1599 சேக்ஸ்பியர் சேர்ந்து கட்டிய அரங்கம்
visjayapalan@gmail.com

Monday, February 4, 2008

ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்
- வ.ஐ.ச.ஜெயபாலன்


சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில்
கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது
வசந்தத்தின் வருகையை எழுதியபடி
ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது
ஒரு தனித்த காட்டு வாத்து.
சிறகுகளால் என்
கண்ணீர் துடைத்தபடி.


அம்மாவின் மரணத் துயரோடு
வெண்பனியையும் உருக்கிவிட்ட
காலம் வலியது.
ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில்
குனிந்துவந்த சூரியன்
ஒளி விரல்களால்
மிலாறுகளை வருடிவிடுகிறது.
மொட்டை மரங்களின்மீது
பசிய அறோரா துருவ ஒளியையும்
வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன்.
எங்கும் பசுமையும் பூக்களும்
பட்டாம் பூச்சியுமாய்
வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும்.


உலகம் சிருஸ்டி மூர்க்கத்தில் அதிர்கையில்
தனி ரக்கூன் கடுவனாய்
அடி நகரில் அலைந்து கொண்டிருந்தேன்.


என்னோடு படகில் ஒரு புதிய நாள்.
எனக்காக நடுத்தீவின் கரைகளில்
சுவர்க்கம் காத்திருந்தது.
ஒற்றைத் தமிழனாக அங்குபோய் இறங்கினேன்.
ஏனைய தமிழருக்கு
வசந்தம் வந்ததென்று யாராவது சொல்லுங்கள்.


பாவம் என் நண்பர்கள்
முன்னர் வந்திருந்தபோது
ரொறன்றோ அடிநகர் பொந்துகளில்
வாழ்வு இல்லை என்றார்கள்.
வாழ்வு நிறைந்த ஸ்காபறோ வீடுகளை மடக்க
மூன்று வேலை செய்தார்கள்.
இம்முறை வந்தபோது
வாழ்வு பற்றிய புதிய கண்டுபிடிப்புகளோடு
வரவேற்றார்கள்.
416 தொலைபேசி வட்டத்துள் அது இல்லை என்றார்கள்.
905 வட்டத்துள் அது இருக்கிறது என்றபடி
மூன்றாவது வேலை தேடிஅலைந்தார்கள்.
அவர்களது பெரிய வீடுகளும்
பெரிய கார்களும் பெருமூச்சுவிட்டபடி
வெறுமையாய்க் கிடந்தன.


ஊர் பார்க்கவந்த என்னை
எங்கும் வழிமறித்தது வாழ்வு.
அந்த வசந்தம் முழுக்க
அடி நகரின் பூத்த சதுக்கங்கள்
பாணர்களும் கூத்தர்களும் கைப்பற்றிய தெருக்கள்
மதுக்கடை
ஒன்ராறியோ ஏரித் தீவு என்று
வாழ்வின் மேச்சல் நிலங்களில்
வசந்ததின் பொற்காசுகளைக் கறந்தேன்.


இங்கும் வீட்டு முன்றலில்
பூஞ்செடிகள் சிர்க்கின்றன.
எங்கள் ஊர் வசந்தமோ
அகதிக் குடிசை முன்றில்களில்கூட
செவ்வந்திக்கும் அவரைக்கும் மலர் சூடி
கூரைகளில்
பாகல் சுரைப் பூக்களின் மகரந்ததைச் சிந்திவிடுகிறது.
இடிபாடுகளூடும்
தன் பூவை நீட்டிவிடுகிற புல்லைப்போல
இறுதியில் வென்று விடுகிறது வாழ்வு.


மலர் அருந்தும் தேன்சிட்டின்
சிறகுகள் எனக்கு.
இலை பிடுங்கும்
மஞ்சள் காலத்தின் முன்னம்
நெடுந்தூரம் போகவேண்டும்.

வாசனை வ.ஐ.ச.ஜெயபாலன்

வாசனை
--- வ.ஐ.ச.ஜெயபாலன்


அத்திலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது
அவளது வாசனையை உணர்ந்தேன்.


நாங்கள் பிரிந்தபோது
வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்
ரொறன்ரொவை நீங்கின.
ஒன்ராறியோ ஏரியின்மீது
தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்
கண்ணீரை மறைத்தபடி
நாம் விடைபெற்றோம்.


அந்த வசந்தத்தில்
சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய
ஒன்ராறியோ ஏரிக்கரையின்
எந்தச் செடிகளை விடவும்
பூத்துப்போயும்
வாசனையோடும் என் படகில் இருந்தாள்.


படகை விட்டு இறங்கும்போது
ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.
நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்
சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.
வானை வெண்பறவைகள் நிறைத்தன.
ஒருகணம் போர் ஓய்ந்தது.
வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்
மங்களப் பாடலும்
பாங்கொலியும் கேட்டேன்.
மீன்பாடும் முழு நிலவில்
அவள் கமழும் ஒரு படகு
நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.


எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்
நாங்கள் இழந்த
விருந்துகளையும் கந்தூரிகளையும்
மட்டுநகர் வாவியையும்
அவர்களாவது மகிழட்டும் என்றாள்.
வெல்க பெடியள் என்றேன்.
வெல்க நம் பெட்டையள் என்றாள்.
கைகோர்த்தும் இருவேறுலகம்.


நாங்கள் பிரிந்தபோது
மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.
கறுப்பு அணில்கள்
எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து
ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.
ஒவ்வொரு தடவையும்
சுவர்க்கங்களைத் தாண்டி
நினைவுகளில் முடிந்த
வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்
மேப்பிள் சருகுகள் மிதிபட
உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.
ஸ்காபரோவில் பசித்திருந்த
கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்
கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.


உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல
என் நினைவுகளின் அடுக்கில்
அவள் தனது
இறுதி அணைப்பின் வாசனையை
இப்படித்ததன் விட்டுச் சென்றாள்.

Tuesday, January 22, 2008

அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன்



போர் நாட்களிலும் கதவடையா நம்

காட்டுவழி வீட்டின் வனதேவதையே

வாழிய அம்மா.

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து

அன்றுநான் நாட்டிய விதைகள்

வானளாவத் தோகை விரித்த

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா

தும்மினேன் அம்மா.

அன்றி என்னை வடதுருவத்தில்

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?



அம்மா

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்

நம் முற்றத்து மரங்களில்

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?

தம்பி எழுதினான்.

வலியது அம்மா நம்மண்.

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்

வானில் ஒலித்த போதெலாம்

உயிர் நடுங்கினையாம்.

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.



இருளர் சிறுமிகள்

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்

கன்னிமாங்கனி வாடையில் வந்த

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.



என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

உன்னை வந்து பார்க்கலையாமே.

போகட்டும் விடம்மா.

அவனும் அவனது

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

உன்னைக் காக்க

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

காடும் உளதே

*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு

Sunday, January 20, 2008

போய்விடு அம்மா வ.ஐ.ச.ஜெயபாலன்

போய்விடு அம்மா
வ.ஐ.ச.ஜெயபாலன்

காலம் கடத்தும் விருந்தாளியாய்
நடு வீட்டில்
நள்ளிரவுச் சூரியன்
குந்தியிருக்கின்ற
துருவத்துக் கோடை இரவு.

எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன
கணவர்களைச் சபித்தபடி வருகிற
இணையத்துத் தோழிகளும் போய்விட்டார்.
காதலிபோல் இருட்டுக்குள்
கூடிக் கிடந்து
மலட்டு மனசில்
கனவின் கரு விதைக்கும்
தூக்கத்துக்கு வழிவிட்டு
எழுந்து போடா சூரியனே.
பாவமடா உன் நிலவும்
கணணியிலே குந்தி
இணையத்தில் அழுகிறதோ

மூன்று தசாப்தங்கள்
தூங்காத தாய்களது
தேசத்தை நினைக்கின்றேன்.
படை நகரும் இரவெல்லாம்
சன்னலோரத்துக் காவல் தெய்வமாய்
கால்கடுத்த என் அன்னைக்கு
ஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை.
பாசறைகளை உடைத்து
உனக்குப் புட்பக விமானப் பாடை
இதோ எடுத்துக்கொள் அம்மா
என் கவிதையின் தீ
போய் வா.

புதை குழிகளின் மேல்
இடிபாடுகளின்மேல்
பறங்கிக்குப் பணியாத என்
மூதாதையரின் சுவடுகளில்
பாலகர் சிந்திய இரத்ததின்மேல்
நம்பிக்கைப் பசுமையாய்
மீந்திருக்கிற
பனந்தோப்புகளின்மேல்
ஆலயங்கள், மசூதிகள் நிமிரும்
எங்கள் கிராமங்களின்மேல்
ஒரு யூட்டோபியாவில் இருக்கிற
என் தேசத்தின் கனவுகளை
மீட்டுவர வேண்டும்.

Monday, January 7, 2008

பரா மாஸ்டருக்கு அஞ்சலி

இந்த நாட்கள் எனது நண்பர்களும் தோழர்களும் உதிருகிற காலமாகி மிகுந்த சோகம் தருகிறது. ஒவ்வொரு அஞ்சலி எழுதுகிற போதும் கால நதி எங்களதும் எங்கள் தந்தையரதும் தலைமுறைகளின் காலடி மண்ணை ஓயாமல் வாரிச் செல்கிறதைத் துயரத்துடன் உணர்கிறேன்.
தோழர்கள் குகமூர்த்தி, சசி கிருஸ்ணமூர்த்தி, சார்ல்ஸ் அபயசேகர, எம்.எஸ்.எம். அஸ்ர்ப், சிவராம், சுந்தரராமசாமி, கலைச்செல்வன், வில்வரத்தினம், புஸ்பராசா, அன்ரன் பாலசிங்கம், பராமாஸ்டர் என நம்பிக்கையுடன் சூரியனைத் தேடி எதிர் புதிர் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்த தோழமைக்கு இனிய பலர் தமது பயணம் முடியாமலே பாதிவழியில் உதிர்ந்துபோனார்கள்.

பராவின் நினைவு எனக்கு 1970 பதுகளின் பிற்பகுதியில் இன ஒடுக்குதலுக்கு எதிராகப் பரந்த தளத்தில் இயங்கிய மேர்ஜ் (MIRJE- Movement for Inter-Racial Justice and Equality-இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பு) அமைப்பின் செயற்பாட்டாளர்களை நினைவு படுத்துகிறது.

அந் நாட்களில் இலங்கைத் தீவு எங்கும் பால், இனம், மதம் கடந்து எங்கள் தலைமுறையின் முற்போக்காளர் பலர் ஏதோ ஒரு வகையில் மேர்ஜ் அமைப்புடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள். தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் பொது நலன் கருதி, மனித உறவுகளும் உரையாடல்களும் தொடரமுடியும்; தொடரவேண்டும் என்கிற சேதியை நவீன யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்ததில் மேர்ஜ் அமைப்புக்கு பெரும் பங்கிருக்கிறது. மேர்ஜ் பதாகையின் கீழ் இன ஒடுக்குதலை நிராகரித்தும் அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம்,மலையக முற்போக்காளருடன் நாமும் அணிதிரண் டெழுந்த அந்த நாட்கள் இப்போதும் கிளர்ச்சி தருகிறது. அந்த மகத்தான எழுச்சியின்
முகங்களாக வடகிழக்கில் வண.பிதா ஜெயசீலனும் அமரர் வண. பிதா சந்திரா பெர்னாண்டோவும், அமரர்கள் வணசிங்கா மாஸ்டர்ரும் அண்ணாமலையும் விமலேஸ்வரனும் பரா மாஸ்டரும் இருந்தார்கள். அவர்களுக்கு உறுதுணையாக நானும் எனது நண்பர்களும் இருந்தோம்.
[Photo]
‚மேர்ஜ் பண்பாடு’ என்பது கண்டியில் இருந்து செயற்பட்ட வண. கத்தோலிக்க பிதா போல் கஸ்பஸ் அவர்களது கனவுகளின் செயல் வடிவமாகும். என் வாழ்வில் சந்தித்த நம்பிக்கை தருகிற கனவுகள் நிறைந்த மனிதர்களுள் அவரும் ஒருவர். அவரது கனவை நனவாக்குவதில் சார்ள்ஸ் அபயசேகரவும் வண. பிதா ஜெயசீலனும் பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் சுனந்த தேசபிரியாவும் வழக்கறிஞர் சிவபாலனும் தீவிரமாக உழைத்தார்கள். இலங்கைத்தீவடங்கிலும் எஞ்சியிருந்த நன்னம்பிக்கைகள் மேர்ஜ் பண்பாடாகத் திரட்டப்பட்டது. மறைந்த சூரியனைப்போல அந்தப் பண்பாடு மீண்டும் ஒருநாள் உதயமாகும்.


1970பதுகளின் பிற்பகுதியில் வண. பிதா ஜெயசீலனின் ஒருங்கிணைப்பில் செயற்பட்ட மேர்ஜ் குழுக் கூட்டம் ஒன்றிலேயே தோழர் பரா எனக்கு அறிமுகமானார். மாக்சிய ரொட்ஸ்கிய கோட்பாட்டாளரும் தொழிற்சங்கவாதியும் மேர்ஜ் குழுவின் முன்னணிச் செயற்பாட்டாளருமாக இருந்த தோழர் பராவை எனக்கு முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்தது வண. பிதா ஜெயசீலனா, நித்தியானந்தனா, அல்லது நிர்மலாவா என்பது எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. அப்பொழுது நான் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராகவும் மேர்ஜ் குழுவின் ஆதராவாளனாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். இருந்தும் நாங்கள் 1977-78 க்களின் பிற்பகுதியில் ஜெயவர்த்தனாவின் அவசரகால ஆட்சி கொடுமைகளின் போதுதான் மிகவும் நெருக்கமானோம். சிங்கள அரச இராணுவம் இன்பம் செல்வமென தலை நிமிர்ந்த பல தமிழ் இளைஞர்களைப் பட்டியலிட்டுக் கடத்திச் சென்று, கொன்று காகங்களுக்கும் நாய்களுக்கும் இரையாக வீசப் பட்ட அந்த இருண்ட நாட்களில் மேர்ஜ் குழுவைச் சேர்ந்தவர்களே எங்கள் கைவிளக்காக இருந்தார்கள். வண. பிதா ஜெயசீலனின் தேவாலயம், யாழ் பல்கலைக் கழகம் மற்றும் பரா-மல்லிகா; நித்தி -நிர்மலா போன்றவர்களது வீடுகளும் தான் எம்போன்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரது புகலாக இருந்தன.
நெருக்கடிகளில் இந்த வாசல்கள்தான் எங்களுக்காகத் திறந்திருந்தன. இந்தக் கூரைகளின் கீழ் தேனீர் அருந்தியபடி அன்றைய வரலாற்றின் மிக முக்கியமான விடயங்களை நாங்கள் கையாண்டிருக்கிறோம். இதில் ஆச்சரியமானவிடயம் நாங்கள் அனைவருமே மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள் என்பதுதான்.

துரதிஸ்டவசமாக அந்தக் கலாசாரம் இன்று இல்லாதொழிந்து போயிற்று. தமிழரது விடுதலைப் போராட்டம் எதிர் நோக்குகிற மிகப் பெரிய நெருக்கடி இதுதான்
என்று கருதுகிறேன்.

நாங்கள் எல்லோரும் 1970 களின் பின்பகுதியில் இருந்து மனித உரிமைக்கான போராட்டங்களில் அசாத்திய துணிச்சலுடனும் தீவிரமாகவும் செயற்பட்டோம். 1980 களில் மலைய மக்கள் பற்றிய கள ஆய்வுகளை மேற்கொள்ள நான் ஹட்டன் சென்றுவிட்டேன். பின்னர் முஸ்லிம் மக்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தேன். 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் இந்தியா சென்றுவிட்டேன். 1987ல் இந்திய இராணுவ நடவடிக்கைகளின்போது மேர்ஜ் இயக்கம் மீண்டும் தீவிரமாக இயங்கியபோது நான் வண. பிதா ஜெயசீலனுடன் சேர்ந்து பணியாற்றினேன். அந்தக் கால கட்டத்தில் பரா மாஸ்டர் அவர்கள் ஐரோப்பா சென்றுவிட்டதை அறிந்தேன். அதன் பின்னர் அவரை 1989 ஆம் ஆண்டு சுசீந்திரனின் அழைப்பின்பேரில் ஆறாவது இலக்கியச் சந்திப்பிற்காக பெர்லின் சென்றபோதுதான் மீண்டும் பார்த்தேன். அப்பொழுது இலக்கியச் சந்திப்பு ஒரு பரந்த ஜனநாயகத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தமை மகிழ்ச்சி தந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட மூன்று அல்லது நாலு சந்திப்புக்களைவிட பெர்லின் சந்திப்பின் போது எங்களிடையே நடைமுறை அரசியல் சார்ந்து அதிக இணக்கப்பாடு இருந்தது என்று கருதுகிறேன். எனினும் முரண்பாடுகளுக்கு வெளியில் நம் தோழமை விட்ட இடத்தில் இருந்து மீள ஆரம்பித்ததையும் இத் தருணத்தில் நினைவு கூர வேண்டும். முரண்பாடுகளோடும் பொதுவிடயங்களில் ஒருமைபட்டுச் செயல்படுகிற வெளி எப்பவும் அவரைச் சுற்றிப் பரந்து கிடந்தது. கருத்து வேறுபாடுகளுடனும் மனிதர்கள் மீது அக்கறையோடு பொதுப் பிரச்சினைகளில் ஒருமைப்பட்டுச் செயற்படுதலும் நட்பைப் பேணுதலும் என்கிற மேர்ஜ் பண்பாட்டை அவர் தொடர்ந்தும் கடைப் பிடித்தார். பழைய மேர்ஜ் தோழர்கள் என்ற முறையில் நித்தியானந்தனையும் என்னையும் சந்தித்ததில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

புலம் பெயர்ந்த தேசிய வாதிகள் பொதுவிடயங்களில் இணைந்து செயற்படுகிற எங்கள் விடுதலைக்கு மிக அவசியமாய் இருக்கிற பண்பை தோழர் பராபோன்ற புலம் பெயர்ந்த மேர்ஜ் நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவர்களை எதிர்த் திசைகளில் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருந்துவிட்டார்கள்.

நமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மட்டத்தில் வாய்ப்புகளை இழந்து வருவதற்கு இந்த அணுகுமுறையும் முக்கியமான ஒரு காரணமாகிறது. இந்தப் பிழையான அணுகுமுறை திருத்தப் படவேண்டும் என்கிற சிந்தனையும் கவலையும் மேர்ஜ் நண்பர் ஒருவரின் பிரிவின்போது ஏற்படுவது இயல்பானதே. பரா மாஸ்டரின் பிரிவினால் துயருறும் அவரது தோழர்களுக்கும் அவரது மனைவியார் மல்லிகாவுக்கும் பிள்ளைகள் உமா, சந்தூசுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
visjayapalan@gmail.com

Wednesday, January 2, 2008

வாசனை

வாசனை
--- வ.ஐ.ச.ஜெயபாலன்

அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது
அவளது வாசனையை உணர்ந்தேன்.

நாங்கள் பிரிந்தபோது
வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்
ரொறன்ரொவை நீங்கின.
ஒன்ராறியோ ஏரியின்மீது
தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்
கண்ணீரை மறைத்தபடி
நாம் விடைபெற்றோம்.

அந்த வசந்தத்தில்
சினைப் பிடித்த சமன் மீன்கள் நீந்திய
ஒன்ராறியோ ஏரிக்கரையின்
எந்தச் செடிகளை விடவும்
பூத்துப்போயும்
வாசனையோடும் என் படகில் இருந்தாள்.

படகை விட்டு இறங்கும்போது
ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.
நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்
சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.
வானை வெண்பறவைகள் நிறைத்தன.
ஒருகணம் போர் ஓய்ந்தது.
வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்
மங்களப் பாடலும்
பாங்கொலியும் கேட்டேன்.
மீன்பாடும் முழு நிலவில்
அவள் கமழும் ஒரு படகு
நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.

எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்
நாங்கள் இழந்த
விருந்துகளையும் கந்தூரிகளையும்
மட்டுநகர் வாவியையும்
அவர்களாவது மகிழட்டும் என்றாள்.
வெல்க பெடியள் என்றேன்.
வெல்க நம் பெட்டையள் என்றாள்.
கைகோர்த்தும் இருவேறுலகம்.

நாங்கள் பிரிந்தபோது
மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.
கறுப்பு அணில்கள்
எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து
ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.
ஒவ்வொரு தடவையும்
சுவர்க்கங்களைத் தாண்டி
நினைவுகளில் முடிந்த
வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்
மேப்பிள் சருகுகள் மிதிபட
உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.
ஸ்காபரோவில் பசித்திருந்த
கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்
கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.

உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல
என் நினைவுகளின் அடுக்கில்
அவள் தனது
இறுதி அணைப்பின் வாசனையை
இப்படித்ததன் விட்டுச் சென்றாள்.

Thursday, November 8, 2007

TRIBUTE TO THAMILCHELVAN - V.I.S.JAYAPALAN

அஞ்சலிப் பரணி
- வ.ஐ.ச.ஜெயபாலன்

எவர்க்கும் பணியா வன்னி
பிள்ளைகளைப் பறிகொடுத்து
விம்மி அழுகிறது.
எதிரிகள் அறிக
எங்கள் யானைக் காடு சிந்துவது
கண்ணீர் அல்ல மதநீர்.

விழு ஞாயிறாய்
பண்டார வன்னியனும் தோழர்களும்
கற்சிலை மடுவில் சிந்திய குருதி
செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில்
எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை
புதைத்து வருகின்றோம்.
புலருகிற ஈழத்தின்
போர்ப்பரணி பாடுதற்க்கு.

எங்கள் மூன்று அம்மன்களும்
பதினெட்டுக் காதவராயன்களும்
முனியப்பர்களும் எங்கே ?
அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய்
வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என
வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது.

போராளிகளுக்காக
தேன் வாசனையை
வாகை மலர் அரும்புகளில்
பொதிந்து காத்திருக்கும்
வன்னிகாடே வன்னிக் காடே
உன்மனதைத் தேற்றிக்கொள்.
உன் புன்னகை மன்னன்
பாண்டவருடன் களபலியானான்.

அவன்தான் தாயே
பலதடவை
காலனை வென்று ஞாலப் பந்தில்
புலிச்சினை பொறித்த உன் தவப் புதல்வன்.
நாம் கலங்குவதை அவன் விரும்பான்

தன் உயிரிலும் தாங்கிய கொடியை
ஐநாவில் ஏற்றுக எனப் பணித்தே அவன் போனான்

visjayapalan@gmail.com

கலைஞருக்கு வாழ்த்து Greetings to M.Karunanidhi - வ.ஐ.ச.ஜெயபாலன்

ONE
கலைஞருக்கு வாழ்த்து
-வ.ஐ.ச.ஜெயபாலன்

காலத்தில் சோழனுக்கு
நீர் ஏந்திக் கல்லணை
நிழலேந்திக் கோவில்.
சேரனுக்கோ
சிலம்பேந்தி வந்த தமிழிச்சி.
பாண்டடியற்கோ சங்கம்.
அடையா நெடுங்கதவும்
ஆஞ்சல் எனும் சொல்லுமாய்
எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு?
கலைஞா உனக்கு
காலச் சுவடாக
விலங்கொடித்தால் ஈழம் இருக்கும்
ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய்

visjayapalan@gmail.com


TWO
கலைஞருக்கு மனம் கனிந்த நன்றி, ஈழத்தமிழர்கள் போராளிகள் தோற்றுப் போனால் நிச்சயமான இனக்கொலை ஆபத்தை எதிர் நோக்குகிற காலம் இது. தமிழர்களும் வங்காளிகளும் பல்தேசிய இனம் என்கிற வகையில் இந்திரா காந்தி அம்மையார் வங்காளதேசம் விடுதலைப் போரின்போதும் எங்கள் போராட்டதிலும் விசேட நிலைபாடு எடுத்தார். மேற்க்கு வங்கம் இந்தியா நாமிருக்கப் பயமேன் என்று வங்க மக்களும் சி.பி.எம் கட்சியும் பக்க பலமாக நின்றார்கள். இன்று எங்கள் பிரச்சினையில் சி.பி.ஐ எடுத்த மனித நேய நிலையை சிபிஎம் கட்சியும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகிறேன். தோழர் சீதாராம் எச்சூரி போன்றவர்கள் நிலமையை நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தருகிறது. சீனச் சார்பு ஜெவிபி கட்சியினரால் ஒரு பத்திரிகையாலரால் சிலர் பிழையாக வழி நடத்தப் பட்டாலும் சி.பி.எம் ஆதரவுக்கு நாம் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். தமிழகத்தில் நெடுமாறன், வீரமணி, திருமாவளவன், மருத்துவர், வைகோ, கவிஞர் கனிமொழி, கவிஞர் இன்குலாப், டாக்டர் கிருஸ்ணசமி தோழர்கள் மகேந்திரன், நல்லக்கண்ணு, குளத்தூர் மணி போன்றோரின் ஆதரவு இல்லாதிருந்தால் நாம் எப்பவோ தெருத்தெருவாக எரிக்கப் பட்டிருப்போம். மேலும் இலகணேசனும் அண்மையில் எங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயலலிதா அம்மையாரின் கண்களும் திறக்கும் என ஈழத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த கால இரு பக்கப் பிழைகள் மற்றும் எங்களது பெரும் தவறு என்பவை இன்று ஊனரப்பட்டு திருத்தப் படுகிறது. இன்றைக்கு வன்னி இந்து சமுதிரத்தில் வலுத்துவரும் சீனச் சதிக்கு எதிராக இந்தியாவின் உறுதியான ஆதரவாளனாக தன்னை அடையாளம் காட்டி இருக்கிறது. இலங்கை பாகிஸ்தான் பர்மா வழியில் இந்தியாவுக்கு எதிரான துறைமுக தளத்தை சீனாவுக்கு வளங்க முன்வந்துள்ளது. கலைஞர் மனம் வைத்தால் எங்கள் விடுதலையும் இந்தியாவுக்கு தலை கொடுக்கிற தோழமையான இலங்கைத் தமிழர்களது தேசமும் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
எங்களை இனக்கொலை முயற்சியில் இருந்து எங்கள் மொழி வழித் தாயான தமிழ்நாடும் கலாச்சார தாயான இந்தியாவும் காப்பாற்ற முன்வரவேண்டும்.