Tuesday, August 21, 2007

காட்டுப் பூவின் பாடல்

ஒரு கதை கேள் தோழி.
ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற
ரோமியோக்களின் கதை கேள்.
காகிதப் பூக்களின் நகரத்தில்
காதலில் கசிந்து
தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி.

என் இனிய பட்டாம் பூச்சியே
சுவர்க் காடுகளுள் தேடாதே.
நான் வனத்தின் சிரிப்பு
வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும்
வானவில் குஞ்செனப் பாடியது
பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ.
ராணித் தேனீக்களே எட்டாத
கோபுரப் பாறைகளில் இருந்து
கம கமவென இறங்கியது
அதன் நூலேணி.

வாசனையில் தொற்றிவந்த
வண்ணத்துப் பூச்சியிடம்
இனிவரும் வசந்தங்களிலும்
தேனுக்கு வா என்றது பூ.
காதல் பூவே வசந்தங்கள்தோறும்
ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற
பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில்
உலகம் தழைத்தது.

நிலைப்ப தொன்றில்லா வாழ்வில்
கடக்கையில் பெய்கிற முகிலே உறவுகள்.

No comments: