Wednesday, September 26, 2007

அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும்

அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும்

வ.ஐ.ச.ஜெயபாலன்


இன்பம் துய்ததுடன்
முடிந்து விடுகிறதா எல்லாம்.
பிடித்த புத்தகத்தில்
இரசித்த பக்கமென
தட்டிச் செல்ல முடியவில்லையடி.
முட்டைகள் மீது
பின்காலால் மணல்மூடி
திரும்பியும் பாராத
ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய்.
மாயை போலாயிற்று எல்லாம்.


இன்பம் இருவரும் நாடியதுதான்.
நட்பு நான் மட்டுமே தேடியதோ ?
முதற் கண் பொழுதில்
முதுகு சில்லிட
ஒரு கணம் தரித்தாய்.
உன் இதயத்துள் இருந்து
அடி வயிறு அதிர இறங்கிய
இன்பச் சூனியம் மறைக்க
சினந்து முகம் திருப்பினாய்.
நானும் கள்வன் என்பதறியாது.


அடுத்த நாள்
ஆயிரம் ஒத்திகையோடு வந்து
மணி கேட்டேனே.
ஏழனம் தெறித்தது
உன் பார்வையில் எனினும்
கனத்த உன் முலைகளும்
இன்ப வலியில் குனித்த புருவமும்
செப்பிய காமமும்
பேசிய மொழிகளும் வேறு.
சொல்லி வைத்தாற்போல்
இருவர் கண்ணிலும்
வியர்த்தது வென்நீர்.
நெடுங் காலமாயிற்று.
நீயும் உன் முதலிரவில்
எனை நினைத்தாயா.


இரவுகள் என்னடி இரவுகள்.
கண் இமைத்தலுட் கழிந்த
இரண்டு புயல் பாம்புகளின்
மூன்று பொழுதுகள்.


முன்றாம் காலை விடிகையில்.
நம் சாதியும் சமயமும்
வேறு வேறெனக் கண்டுபிடித்தாய்.
தெரிந்ததாக தெரியேல் என்றது
நான்காம் பகல்
கருத்தரங்கு முடிந்து பிரிகையில்.


தெருவில் சிரிக்காதே
கடிதம் எழுதாதே
நண்பரோடு இதுபற்றி
கங்கை கொண்ட சோழனாய்
பெருமை பேசிவிடாதே என்றாய்
ஆண்கள் பற்றி இத்தனை தெளிவா.
அதன் பின் உனக்கு
நானும் யாரோ நீயும் யாரோ.
எப்படி முடிந்ததடி.


காலையில்
அந்தக் குண்டு வீச்சுச்
சேதி படித்தேன்.
மதியம் உனது
அகால மரணம் அறிந்ததிதில்
சிதறினேன்.
மாலை முழுவதும்
வெறுமையில் உழன்றேன்.
இரவு மனைவி தலை வலியா என
அணைந்த போது
ஒரு வழியாக தேறுதலடைந்தேன்.

2 comments:

கொண்டோடி said...

உங்கள் வலைப்பதிவை இப்போதான் கண்டுகொண்டேன்.
உங்களின் வலைப்பதிவுப் பிரவேசத்துக்கு நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள்.

Shanmugampillai Jayapalan ஜெயபாலன் V.I.S.Jayapalan said...

கொண்டோடிக்கு நன்றி, உங்கள் ஆலோசனைப்படி தமிழ் மணத்துடன் இணைந்துள்ளேன்.