செக்கு மாடு
வ.ஐ.ச.ஜெயபாலன்
தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம்.
அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறுகடிதத்துக் குள்ளேயே மந்திரித்த நூலும் சென்னை வடபளனி வீபூதி பிரசாதமும் வைத்து அனுப்பினார்கள். இது அவசர முதலுதவி.
இதைவிட அவனது நலத்துக்காகத் தமிழகத்துக் கோவில்களுக்கு யாத்திரை போய் பிரார்த்தனை செய்யப் போவதாகவும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். தங்கள் சேமிப்பில் கொஞ்சம் பணம் இருப்பதாகவும் தங்கள் யாத்திரைக்காகப் பணம் அனுப்புவது அவசியம் இல்லை என்றும் வேறு எழுதியிருந்தார்கள். ராசன்தான் குமரனுக்கு செய்வினை செய்து பேயை ஏவி விட்டிருக்கிறான் என்ற விடயத்தையும் கண்டுபிடித்து எழுதியிருந்தாள் கனகம்மா. மந்திரவாதிகளின் ஊரான மட்டக் களப்புக்கு அண்மையில் ராசன் போய் வந்திருப்பதாக அவளுக்கு துப்புக் கிடைத்திருக்கிறதாம்.
தன்னை நேசிக்க உலகத்தில் இரண்டுபேராவது இருக்கிறார்களே என்கிற விடயம் பாறாங் கல்லாக உறைந்துபோயிருந்த அவனது மனதை நெகிழ வைத்திருக்க வேண்டும். கடிதம் வந்த அன்று குமரன் அந்தக் கடிதத்தை முதமிட்டுக்கொண்டு நெடுநேரமாக அழுது கொண்டிருந்தான். பல்வேறு சமூக விடயங்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிய போதும் இந்து சமய, தமிழ் கலை கலாச்சார விடயங்களில் மட்டும் தமிழகம் சம்பந்தப் பட்டவை எல்லாம் மகத்தானவை என்று கருதுகிற சராசரி இலங்கைத் தமிழன்தான் அவனும். அம்மாவினதும் கமலியினதும் கடிதம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மந்திரித்த நூலைக் கையில் கட்டிக் கொண்டு ‘இனி ஏலுமென்றால் ஆட்டிப் பார்‘ எனெ தனக்கு தொல்லை தருகிற பேய்க்குச் சவாலும் விட்டான்.
கொஞ்ச நாட்களுக்குப் பேய் தென்படவில்லை. பேய்க்கு நேர்ந்த கதியைப் பற்றி அம்மாவுக்கும் கமலிக்கும் மகிழ்ச்சியோடு கடிதம் எழுதிய அன்று இரவே மீண்டும் பேயின் சேட்டைகள் ஆரம்பித்து விட்டன. பாத்திரங்களை உருட்டி ஒலி எழுப்புகிற வளமையான சேட்டைகளோடு பேய் இப்போது இரகசியத் தொனியில் பேசவும் செய்தது. நச்சுக் கொல்லி மருந்துகளுக்குப் பழக்கப் பட்டு விடுகிற கொசுக்களைப் போல அந்தப் பேயும் வீபூதிக்கும் மந்திரித்த நூலுக்கும் பழக்கப் பட்டுவிட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது அச்சத்தில் குமரனின் உடல் நடுக்கம் எடுத்தது.
2
இரண்டு வருடங்களுக்கு மேலாக குமரன் ஒஸ்லோவின் மத்தியில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் பாத்திரம் கழுவுகிற மெசினுக்கு எடுபிடி ஆளாக இருந்து வருகிறான். வந்து குவிகிற எச்சில் தட்டுக்களையும் அழுக்குச் சமையல் பாத்திரங்களையும் அந்த இரும்புப் பூதத்தின் வாயில் திணிக்கிறதும் அது நக்கித் துடைத்துத் தருகிறவற்றை மீண்டும் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கிறதும் மட்டும்தான் அந்த ஊணவு விடுதியில் அவன் செய்து வருகிற வேலை. பயிற்றுவித்தால் ஒரு குரங்குகூட இதைச் செய்துவிடும் என்பது புரிகிற போதெல்லாம் குமரனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும்.
மழை நாட்களில் எச்சில் தட்டுகள் அவ்வளவாகப் பெருகாது. கழுவுகிற மெசினும் அவனும் சற்று ஓய்ந்திருப்பார்கள். அப்போதெல்லாம் தான் ஒரு பல்கலைக் களக பட்டதாரி என்கிற விசயத்தை அந்த மெசினுக்குப் புரிய வைக்க முயற்ச்சி செய்வான். வீட்டுச் சொந்தக்காரி ‘பேரித்‘ , அந்த உணவு விடுதி நிர்வாகி ‘ஆரில்ட்‘ என அவனோடு சம்பந்தப் படுகிற நோர்வேஜியர்களைப் போலவே அந்த மெசினும்கூட அவனது சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதுதான் அந்த மெசின்மீது அவனுக்கிருந்த மனத்தாங்கல்களுக்குக் காரணம். இருக்காதா பின்னே.
தமிழ் மாணவர்கள் இலங்கைப் பல்கலைக் களகங்களில் அனுமதி பெறுகிற சாத்தியம் அருகியிருந்த காலக் கட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கே அனுமதி பெற்றவனல்லவா அவன். இதற்காக அவன் தனது இளமைக் காலம் முழுவதையுமே இழந்திருக்கிறான். பேராதனைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்த காலத்தில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டு அகதியாக யாழ்ப்பாணத்துக்கு ஓடிச் சென்றான். பின் வருடக் கணக்கில் உண்ணாவிரதம் ஊர்வலம் என்று போராடி யாழ்ப்பாணப் பல்கலைக் களகத்துக்கு இடமாற்றம் பெற்று அங்கேயே படித்து முடித்து பட்டமும் பெற்றான். இவையெல்லாம் சாதனையே இல்லையா ? யாரும் இதனை பொருட்படுத்த வேண்டியதே இல்லையா ?
வாட்டசாட்டமான தேகத்துடன் வேலை தேடி வந்திருக்கிறவன் இலங்கைத் தமிழன் என்று தெரிந்ததுமே அந்த உணவு விடுதியின் நிர்வாகி ஆரில்ட் பாத்திரம் கழுவுகிற வேலைக்கு குமரனே மிகப் பொருத்தமான நபர் எனப் புரிந்து கொண்டு அவனுக்கு வேலை வழங்கினான். அந்த மெசினுக்குக் கூட நெடும் காலமாக இலங்கைத் தமிழர்களது சகவாசம் இருந்ததில் தமிழைப் புரிந்து கொண்டது. குமரனும் அந்த மெசினுக்கு உண்மையுடன் குறிப்பறிந்து பணிபுரிந்தான். முறைப்படி அதனைப் பராமரிப்பது, வேலை முடிந்தபின் குளிப்பாட்டி ஈரம் துவட்டி விடுவது என அவன் அந்த மெசினுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. தன்னை அழிப்பதற்க்குச் சதி செய்கிற பேயுடன் அந்த மெசின் தொடர்பு வைத்திருக்கிற விடயம் தெரிந்தபோது அவன் ஆடிப் போய்விட்டான். இந்தக் குழப்பத்தில் அந்தமெசினை அவன் உதைத்தது என்னவோ உண்மைதான். இதைப் போய் அந்த உணவு விடுதி யின் நிர்வாகி பெரிது படுத்தி இருக்க வேண்டாம். நிர்வாகி பக்கத்தில் எங்கோ நிற்க்கிற நேரம் பார்த்து அந்தப் பாத்திரம் கழுவும் மெசின் ‘சிசுக் கொலைகாரன், சிசுக் கொலைகாரன்‘ என அவனைக் கிண்டல் செய்தது.
அதுவரை பேய்மட்டும் அவன் மீது இப்படி ஒரு பழியைச் சுமத்தி வந்தது. குமரன் ஆத்திரத்துடன் ‘நீயுமா புரூட்டஸ்‘ என்று கத்தியபடி மெசினுக்கு உதை விட்டான்..
3
இன்றைய நாள் முடிவடைவதற்குள்ளேயே அந்தப் பேயை தேடிப் பிடித்து நொறுக்கிப் போட வேண்டுமென்று குமரனுக்கு வெறியேற்றப் பட்டதற்கு போதிய காரணங்கள் இருந்தன. குமரன் எப்போது வீட்டுக்குப் போனாலும் அவனது அறை மூலையில் இருந்த மின்சார அடுப்பங்கரையில் நாற்றமெடுக்கும் எச்சில் கோப்பைகளை பேய் குவித்து வைத்திருக்கும். அந்தப் பேய் இதனோடு திருப்திப் படாமல் இரவிரவாக அந்த எச்சில் பாத்திரங்களை நிலத்தில் எறிந்து உருட்டி ஒலி எழுப்பி அவனது தூக்கத்தையும் கூட கெடுத்தது. காலையில் போய்ப் பார்த்தால் பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்காது.
ஒருமுறை எதிர்பாராத விதமாக அவனது வீட்டுக்கும் ஒரு விருந்தாளி வந்திருந்தான். பல்களைக்களக நண்பனான அந்த விருந்தாளி வீட்டுக்கு வந்த உடனேயே பேயின் ஆதரவாளனாக மாறி விட்டதில் குமரனது கோபத்துக்கு ஆளாக வேண்டி யிருந்தது. அடுப்பங்கரையில் எச்சில் கோப்பைகளைக் குவித்து வைப்பது பேயல்ல குமரன்தான் என்பது அவனது வாதம். “ஒஸ்லோ நகரம் முழுவதற்குமே எச்சில் கோப்பை கழுவித் தாறவன் நான், என்னைப் பார்த்து சாப்பிட்ட கோப்பை களுவ வக்கில்லாதவன் என்று சொல்ல நீ யாரடா ?” ஏன்று பேசி குமரன் அவனைத் துரத்தி விட்டான்.
அந்த இரவு எச்சில் பாத்திரங்களைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது பேய். அவனுக்கு கோபம் தாளவில்லை. “சொல் நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என அவன் கத்தினான். மின்சார அடுப்பங்கரைப் பக்கமாக பேய் சிரிக்கும் சப்தம் கேட்டது. “உனது அக்கா குந்தவையின் சிசுவைக் கொலை செய்தது பாவம் இல்லாமல் என்னவாம்” என்று பேய் முனுமுனுத்தபோது அவன் உண்மையிலேயே தடுமாறிப் போனான். அவனது முகம் வெளிறிப்போனது. உடல் நடுங்கியது. “குந்தவை அக்காவின் பிள்ளையை நானா கொன்றேன்” என்று தன்னைத் தானே விசாரித்து துக்கித்தான்.
அவனுக்கு மூன்று சகோதர சகோதரிகள் . அக்காவின் பெயர் குந்தவை. தங்கையின் பெயர் செல்வி. தம்பி சுரேஸ். போர்க்களத்தில் மரணமடைந்து விட்ட அவனது இயக்கப் பெயர் மேஜர் பகத்சிங். குமரனின் அக்கா பிறந்த தசாப்தத்தில் பிறந்த பலருக்கு குந்தவை என்ற பெயர் வாய்த்திருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை வாசித்துவிட்டு யாழ்ப்பானத்து தமிழர்கள் சிலர் சோழ அரசர்களாகவும் இளவரசிகளாகவும் தங்களை வரித்துக் கொண்டு பகல் கனவுகளில் புலிக் கொடியுடன் பவனி வந்த நாட்கள் அது. புலிக் கொடி தாங்கியபடி குதிரைகளிலும் கப்பல்களிலும் திரிந்த அவர்கள் தமது கனவுலகச் சுப்பர்மான்களான சோழ அரசர்களது பெயர்களை தமது பிள்ளைகளுக்கும் சூட்டினர். அவனது அக்காவும் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் வெளிவந்த காலத்தில் பிறந்தவள்தான். அவளுக்கு சோள இளவரசி குந்தவைப் பிரட்டியின் பெயர் இப்படித்தான் வாய்த்தது.
4
பெயரின் பின்னனி எதுவாக இருந்த போதும் குந்தவை சராசரி யாழ்ப்பானத்துப் பெண்தான். சின்னவயதில் இருந்தே படிப்பில் அவளுக்கு ஈடுபாடிருக்கவில்லை. வீட்டுப் பணிகளை ஒரு ஈடுபாட்டோடு செய்கிறது, ஊர் ஊராக ஆள் அனுப்பி நல்ல பூக்கன்று நாற்றுகளைச் சேகரித்து வீட்டு வளவையும் முற்றத்தையும் பூஞ்சோலையாக்குவது; இலங்கை வானொலி `பூவும் பொட்டும் – மங்கையர் மஞ்சரி` நிகழ்ச்சிக்கு கடிதங்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பி வானொலியில் அவை வாசிக்கப் படுகிறபோது உச்சி குளிர்ந்து போவது, இப்படி அவளது உலகம் யாழ்ப்பானத்து சராசரி இளம் பெண்களின் உலகம்தான். இலங்கை வானொலியில் வாசிக்கப் பட்ட குந்தவையின் மிக சாதாரண கவிதை ஒன்றைப் பெண் பெயரில் “ஓகோ ஒகோ” எனப் புகழ்ந்து பாராட்டிக் கடிதமெழுதி குந்தவையின் சினேகிதனாகியவன்தான் ராசன். இதனை மோப்பம் பிடித்தது, ராசனின் ஊர், பெயர், சாதிசனங்களைப் பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்தது பின்னர் குந்தவையை விசாரித்து எச்சரித்தது இவையெல்லாம் யாருக்குமே தெரியாமல் நான்கு சுவர்களுக்குள் கனகம்மாவே நடத்தி முடித்திருந்த நாடகம். முதலில் காதல் ஒன்றும் இல்லை, வானொலிக் கவிதைகள் தொடர்பாகப் பாராட்டி ராசன் கடிதம் எழுதியது மட்டும்தான் நடந்தது என்று வாதிட்ட குந்தவைக்கு கனகம்மா தான் கைப்பற்றி வைத்திருந்த கடிதங்களைக் காட்டினாள். பின்னர் அவளிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு கதையை தங்கள் இருவருக்குள்ளும் அமுக்கி விட்டாள் கனகம்மா .
இது நடந்து நான்கைந்து வருடங்களுக்குப்பின் மீண்டும் ராசனும் குந்தவையும் தொடர்புகளை பராமரிக்கும் விடயம் கனகம்மாவுக்குத் தெரிய வந்தது. அப்பாவுக்குக்கூட இதனைச் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடு கனகம்மா அப்போது பல்கலைக்களக மாணவனாக இருந்த குமரனிடம் குந்தவையின் காதல் விபரம் சொன்னாள். குமரனே அப்பாவாக அவதாரம் எடுத்து, குந்தவையை அக்கா என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து அட்டகாசம் செய்துவிட்டான். “எங்கள் அந்தஸ்தென்ன கேவலம் ஒரு சிறு சாப்பாட்டுக் கடை நடத்திற நாயை கல்யாணம் கட்டப் போறியா” என்று குமரன் கத்தினான். “தம்பி நீ பேசிற கொம்யுனிசம் இதுதானா” என்று கிளர்ந்த குந்தவை, பின் பணிந்துபோய் இனி ராசனிடம் தொடர்பு கொள்வதில்லை என்று மீண்டும் சத்தியம் செய்து கொடுத்தாள். இந்தத் தடவை கனகம்மா அவளை நம்பவில்லை. பின்னர் குந்தவைக்கு திருமணப் பேச்சுகள் ஆரம்பித்தபோதும் செவ்வாய் சாதகத்தில் எழாவது வீட்டில் குந்தியிருந்து திருமன முயற்ச்சிகளைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது.
இதுதான் அவர்களது வாழ்வைத் தலை கீழாக மாற்றிப் போட்ட சம்பவங்கள் பல வேகமாக இடம் பெற்ற காலக் கட்டம். “நாட்டுக்காக வீட்டை விட்டுப் போகிறேன். என்னைத் தேடவேண்டாம்” என துண்டெழுதி சோற்றுப் பானைக்குள் வைத்துவிட்டு சுரேஸ் காணாமல் போனது இந்தச் சம்பவக் கோவையின் தொடக்கம். அதன் பின் தங்கை செல்வி பூப்படைந்தது, நாகலிங்கம் பணியில் இருந்து ஓய்வூதியம் பெற்று வீட்டில் சாய்மனை நாற்காலி வாசியானது, போராளியாக இயக்கத்துக்குப் போன சுரேஸ்கா அகால மரணமடைந்து மாவீரனாகியது, குமரன் நோர்வேக்கு அகதியாக வந்து சேர்ந்து வீட்டாரின் சுமைதாங்கியானது எல்லாம் அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவங்கள்.
5
குமரன் அகதியாக நோர்வே வந்து சிதைய யாழ்ப்பாணத்தில் அவனது குடும்பம் சமூக பொருளாதார ரீதியாகப் பலப்படத் தொடங்கியது. புதுப் பவிசு வந்ததில் நாகலிங்கம் தன்னையும் பணக்காரர் வரிசையில் தூக்கி இருத்திக் கொண்டார். கடந்த சில வருடங்களாகக் குந்தவைக்கு பள்ளி ஆசிரியர் மட்டத்தில்கூட ஒரு மாப்பிளை தேட முடியாமல் கஸ்டப் பட்ட நாகலிங்கம் திடாரென்று டாக்டர், எஞ்சினியர், பல்கலைக்களக விரிவுரையாளர் எனன்ற மட்டத்தில் மாப்பிளை தேட ஆரம்பித்தார். குந்தவைக்கு கொழும்பு பல்களைக்களக விரிவுரையாளரான பேரின்பத்தை திருமணம் பேசப் பட்டது. மாப்பிளை வீட்டார் மூன்று லட்சம் சீதணம் கேட்பதாக முதலில் கடிதம் வந்தது. குமரனும் சரி பணம் அனுப்புகிறேன் என்று வழி மொழிந்து பதில் எழுதினான்.
இதற்குள் பேரின்பத்தின் தாயார் மகனுக்கு பல பணக்கார வீடுகளில் இருந்து திருமணம் பேசி வருகிறார்கள் என்று கூறி தங்கள் பெருமை பேசத்தொடங்கினாள். குந்தவையின் சாதகமும் பேரின்பத்தின் சாதகமும் நன்கு பொருந்தி இருப்பதால்தான் தாங்கள் இந்த திருமணத்துக்கு சம்மதித்தாகவும் இந்த திருமணத்தால் தங்களுக்கு நட்டம்தான் என்றும் அவள் திரும்ப திரும்ப கூறியபோது நாகலிங்கம் கொதித்துப் போய்விட்டார். “நாங்கள் மட்டுமென்ன சின்னப் பணக்காரர்களா ? எனது மகன் குமரன் நோர்வேயில் கோடாஸ்வரனாக இருக்கிறான். படதாரி, பெரிய அறிஞன். நோர்வே அரசாங்கமே அவனை இலங்கைக்குத் திரும்பி செல்ல விடாமல் வேலை, வீடு எல்லாம் கொடுத்து தங்கள் நாட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலகாலத்தில் அவனுக்குக் குடியுரிமைகூடக் கொடுத்து விடுவார்கள். நாங்களும் பணக்காரர்தான். எங்களாலும் ஐந்து லட்சம் சீதனமாகக் கொடுக்க முடியும்” என்று ஆத்திரப் பட்டு பொரிந்து நாகலிங்கம் வாக்குறுதியும் வேறு கொடுத்து விட்டார். வீட்டில் கனகம்மா, செல்வி, குந்தவை எல்லோரும் இதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள்.
இதை அறிந்ததும் குமரனுக்கு ஐந்தாறு நாட்களாக கை கால் ஓடவில்லை. ஒருநாள் முழுவதும் அறையைப் பூட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதான். தனது தந்தையாராகிய நாகலிங்கத்தை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்து நீண்ட கடிதமொன்றும் எழுதினான். சம்பிராய பூர்வமாக “உங்கள் அன்பு மகன் குமரன்” என்று வீட்டுக்கு எழுதும் கடிதங்களை கையொப்பமிட்டு முடிப்பது அவனது வளக்கம். ஆனால் அந்தக் கடிதத்தில் அவன் வெறுமனவே “குமரன்” என்று மட்டுமே கையொப்பமிட்டிருந்தான். நாகலிங்கம் அதைப் பற்றி ஒன்றுமே அலட்டிக் கொள்ளவில்லை. உனது பெருமையை நிலை நாட்டத்தான் அப்படிச் சொன்னேன். அந்த லெக்சரர் மாப்பிள்ளை ஐந்து என்ன, பத்து லட்சமே பெறுவான். நீயும் கொஞ்ச நாளைக்கு ஜெர்மனியில் இருக்கின்ற பக்கத்து வீட்டுப் பையன் நாதனைப்போல இரண்டு வேலை மூன்றுவேலையென ஓடி ஆடிச் செய்யலாம்தானே. கவலையை விட்டுவிட்டு ஆகிறதைப் பார். சீதணப் பணத்தைக் கூடிய விரைவில் அனுப்பிவை.” என்று நான்கு வரியில் கடிதம் எழுதி யிருந்தார்.
ஒருவாறு பாரமிழுக்கிற மிருகம்போலாகி உறக்கத்தையும் ஓய்வையும் மறந்து இரண்டு மூன்று உணவு விடுதிகளில் ஓடி ஓடிக் களுவி ஐந்து லட்சம் அனுப்பியபோது, கனகம்மா குந்தவையும் கையுமாக கொழும்புக்கு வந்து தொலைபேசியில் விக்கி விக்கி அழுதாள். குந்தவை கர்ப்பமாய் இருக்கிறாள், அந்தப் படுபாவி ராசன்தான் அவளை ஏமாற்றிக் கெடுத்துப்போட்டான் என்று அழுத அம்மாவைச் சமாதானம் செய்த குமரன், ரகசியமாக கருச்சிதைவு செய்துவிட்டு ஏற்கனவே பேசி ஒழுங்காய் இருக்கிற மாதிரி பேரின்பத்துக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று தொலை பேசி மூலமே தீர்ப்பு வளங்கினான்.
“நீ மட்டும் கமலியைக் காதலிக்கலாம் நான் ராசனை விரும்பினால் மட்டும் பிழையா” என்று வாதாட முற்ப்பட்ட குந்தவையை “பொத்தடி வாய் வேசை” என்று நெத்தி அடியில் வாயை அடைத்தவன் கருச்சிதைவுக்குமுன் இனி அவளோடு எதுவும் பேசமுடியாது என்றும் மறுத்து விட்டான்.
“செப்புச் சல்லியும் சீதனமாகத் தனக்கு வேண்டாம் என்று ராசன் கடிதம் எழுதியிருக்கிறான் மகனே. குந்தவையை ராசனுக்கும் செல்வியை பேரின்பத்துக்கும் கலியாணம் செய்து வைப்போமா” என்று தயங்கி தயங்கி கோரிக்கை விடுத்த தாய் மீதும் வெறுப்பைக் கக்கினான். நாகலிங்கமும் குமரனும் , ராசனை நிராகரித்ததற்க்கு ஒரு சிறு உணவு விடுதியின் சொந்தக் காரனான ராசனது தாழ்ந்த சமூக அந்தஸ்துதான் காரணம். மற்றப்படி ராசனும் அவர்களும் ஒரே சாதிதான்.
குந்தவையின் திருமணம் நடந்து அதற்குள் இரண்டு வருட மாகிவிட்டது. அவள் இப்போது தனது கணவன் பேரின்பத்துடன் லண்டனுக்கு வரவிருக்கிறாள். “அத்தானுக்கு மேற்படிப்புக்காக புலமைப் பரிசில் கிடைத்திருக்கிறது. வருகிற யூன் மாதமளவில் லண்டன் செல்கிறோம். நான் தாயாக இருக்கிறேன். கட்டாயம் நீ என்னை வந்து பார்க்க வேண்டும்.” எனக் குந்தவை மகிழ்ச்சியோடு கடிதம் எழுதியிருந்தாள். லண்டனில்தான் குழந்தை பிறக்குமாம்.
6
இரவும் பேய் 'சிசுக் கொலை காரன். ' என்று குற்றம் சாட்டியதில் குமரனுக்கு நித்திரை கொள்ள முடியவில்லை. குந்தவையின் கருச் சிதைவுக்கு ஒருவகையில் தான்தான் காரணமென அவனது மனது அடித்துக்கொண்டது. கருச் சிதைவைச் 'சிசுக்கொலை ' என்று பேய் சொல்கிறது. பேயின் கூற்றில் அவனுக்குச் சம்மதமில்லை.
காலையில் எழுந்தவன் நேரே அடுப்பங்கரைக்குப் போய்ப் பார்த்தான். பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்கவில்லை. எனினும் மின் அடுப்பிலும் கழுவும் தொட்டியிலும் எச்சில் கோபைகளையும் உணவு அடிப்பிடித்த பாத்திரங்களையும் பேய் குவித்து வைத்திருந்தது. பேயின் தொல்லையால் அவன் இளைத்துப் போனான். தூக்கமின்மையால் நிரந்தரமாகவே கண்கள் சிவந்து போனது.
தலைவலியும் குடிகொண்டது. தலைவலி தாங்க முடியாத ஒரு பொழுதில் சென்ற மாதமே அவன் வைத்தியர் ஒருவரைப் போய் பார்த்திருந்தான். துக்கமும் தூக்கமின்மையும் காராரணமாக குமரனது மனநிலை பாதிப்படைந் திருப்பதாக அந்த வைத்தியர் கூறினார்.
வைத்தியருக்கு விசயம் தெரிந்திருக்க நியாய மில்லை. தன்னுடைய வீட்டில் பேய்த் தொல்லை இருப்பதையும் தூக்க மின்மைக்கு அதுதான் காரணமென்பதையும் குமரன் அந்த டாக்டருக்கு எடுத்துச் சொல்ல முயன்றான். அவனது நோர்வீஜிய மொழி அறிவு அதற்கு ஒத்துழைக்க வில்லை. மூன்றாம் பேர்வளிக்கு இந்த விடயம் தெரிய வேண்டாம் என்பதால் மொழி பெய்ர்ப்பாளர் ஏற்பாட்டுக்கும் குமரன் ஒருப்படவில்லை.
அவனது கதைகள் எல்லாவற்றையும் கேட்ட அந்த வைத்தியர் 'இரண்டு வருடங்களாக இந்தியாவுக்குச் சென்று அம்மாவைப் பார்க்கவும் கமலியை திருமணம் செய்யவும் ஏன் உன்னால் முடியாமல் இருக்கிறது ? ' என்று ஆச்சரியத்தோடு வினவினார்.
'எனக்கு முதலில் இந்தியா விசா கிடைத்தது. அப்போ எனது தங்கை செல்விக்கு சீதணம் உழைத்து அனுப்ப வேண்டி இருந்ததால் இந்தியாவுக்குப் போக முடியவில்லை. இப்போ இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா விசா தருவதில்லை ' என்று தனக்குத் தெரிந்த நோர்வீஜிய மொழியில் சிரமத்துடன் எடுத்துச் சொன்ன அவன் மனமுடைந்து அழுதான். 'இலங்கைத் தமிழர் என்பதால் இந்திய விசா கிடைக்கவில்லையா ' என்று அந்த வைத்தியர் ஆச்சரியப் பட்டார். கமலியையும் அம்மாவையும் இங்கே அழைத்துப் பார்க்கலாம் என்றால் நோர்வீஜிய விசாவும் கிடைக்கவில்லை என்றான் குமரன். டாக்கடர் இரண்டு சீட்டுகள் எழுதித் தந்தார். ஒன்று மருந்துக் கடைக்கு. மற்றது இந்தியத் தூதுவருக்கு. குமரனின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அவனுக்கு இந்திய விசா வளங்கி உதவிட வேண்டும் எனக் கோரும் இந்தியத் தூதுவருக்கான சிறு கடிதம் அது.
டாக்டர் நல்லவர் போலத்தான் தோன்றினார். அவருடைய மாத்திரைகளுக்குப் பேயை விரட்டுகிற சக்தி இருக்கிறதாகவே பட்டது. முந்தி மந்திரித்த வபூதிக்கும் நூலுக்கும் பழக்கப் பட்டது போல, இந்த மருந்துக்கும் பேய் பழக்கப் பட்டுவிடுமோ என குமரன் அஞ்சினான். வைத்தியரின் கடிதத்தைப் பார்த்து விட்டு இந்தியா விசா தந்து விடுவார்கள் என்றும் நம்பத் தலைப்பட்டதில் அவன் மீண்டும் உயிர்க்கத் தொடங்கியிருந்தான். வைத்தியரைச் சந்தித்த இரவு முழுக்க அவன் மூசி மூசித் தூங்கினான். நெடு நாளைக்குப் பிறகு கனவு கண்டான். காலையில் எழுந்த போது ஒரு கனவு மட்டும் நினைவில் சிதைந்திருந்தது.
அந்தக் கனவு முழுவதும் சூரியன் கனன்று கொண்டிருந்தது. உலகத்தைப் பிடித்திருந்த வெண்பனி எல்லாம் உருகி ஆறாக ஓடிக் கழிந்தது. உலகம் பச்சையாக உயிர்த்துத் துடித்தது. குமரனும் ஒரு மரமாக வேர் ஊன்றினான். கைகள் கிழைகளாக விரிய, விரல்கள் மிலாறுகளாக சிலும்பின. கிழைகள் எங்கும் பசும் தளிர்களும் பூக்களும் பிஞ்சுகளும் நிறைந்து இலைகளும் தளிர்களுமாயின. அந்த மரத்தைப் பற்றிப் படர்ந்த பூங்கொடி வேறு யாருமில்லை, கமலினிதான். அந்த மரத்தின் நிழலில் வந்து தங்கிய கிழப் பசுவுக்குக் கனகம்மாவின் சாயல். இந்தப் பசுவும் நானும் சினேகிதம். இந்தப் பசு ஒருபோதும் என்னைத் தின்று போடாது என்று குதூகலமாகச் சொன்னது பூங்கொடி. பூங்கொடியைத் தழுவிய மரம் பசுவுக்கு கனிகள் தந்தது.
கடாயமாக இரண்டு வேலை செய்து பணம் சேற்க வேண்டி இருந்ததில், நெடுநேரம் தூங்க வைக்கிற மாத்திரைகளைக் கைவிட நேர்ந்தது. வைத்தியர்கூட பிசாசின் ஆள்தானோ என்று குமரனுக்குச் சந்தேகமும் வந்தது.
காலையில் வேலைக்கு வருகிறபோதும் பேயின் சேட்டை இருந்தது. இரண்டொரு தடவை ஓடிக் கடந்து செல்கிற மோட்டார் வண்டிக்குள் பாய்ந்து, அந்தப் பேயை வண்டிச் சக்கரங்களுள் நசித்துப் போடவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. வருகிற வழியில் நெடு நேரம் ஆற்றுப் பாலத்தில் நின்றான். ஆற்றில் பாய்ந்தால் பேயை ஆற்றில் மூழ்கடித்து விட்டு தான் மட்டுமே தப்பித்து கரை சேர முடியுமா என்பது பற்றி அவனால் ஒரு இறுதி முடிவு எடுக்க முடியவில்லை.
உணவு விடுதி மூடுவதற்கு இன்னமும் நேரமிருந்தது. வெளியே அந்த நள்ளிரவு பட்டப் பகலாகத் தோற்றம் தந்ததை அவன் சன்னல் வழியாகப் பார்த்தான். வீதிக்கும் கட்டிடங்களுக்கும் பின்னே தேவதாரு மரங்கள் துருத்திக் கொண்டிருந்த மலைக் காட்டின் மேலே அவனது கனவில் சுடர் விட்ட, அதே சூரியன் இருந்தது. உணவு விடுதிச் சமையல் அறைக்குள், வேலையும் மேலதிக நேர வேலையுமாக இரண்டு வருடங்களாகத் தேய்ந்து கிடக்கிற குமரனுக்குக் கனவில் வந்த சூரியனை மீண்டும் பார்ப்பது ஆறுதலாக இருந்தது. ஆப்பிள் மரம்போல துளிர்ப்பதும், கொடி படரவும் பசு துயிலவும் இடம் தந்து வாழ்கிறதும் சாத்தியமே என, கண் சிமிட்டும் அந்தச் சூரியன் அவனுக்கு எடுத்துச் சொன்னது. எனினும் சன்னலில் நின்று ஆறுதல் அடைகிறது சாத்தியமில்லை. குவிகிற எச்சில் தட்டுகளும் கழுவி ஓய்கிற மெசினும் அவனை வா வா என்று அதட்டிக் கொண்டிருந்தது.
நார்வே நாட்டுக்கு வருகிற வரைக்கும் குமரன் எச்சில் தட்டுகள் அற்ற ஒரு உலகத்தில் வாழ்ந்தவன். படிக்கிற போதும் சரி, பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றிய போதும் சரி அவனது உலகத்தில் எச்சில் தட்டுகளும் அழுக்குச் சமையல் பாத்திரங்களும் இருக்கவில்லை. எப்போதாவது அதிகாலைப் பொழுதில் மூத்திரம் பெய்ய எழுந்து வெளியில் வந்தால் புழைக்கடையில் வாழை மரக் கூட்டத்தின் அடியில் லாம்பு வெளிச்சம் தெரியும். கொட்டும் பனியில் எச்சில் தட்டுக்களையும் சமையல் பாத்திரங்களையும் குவித்து வைத்துப் பற்றுத் தேய்த்தபடி கனகம்மாவும் குந்தவையும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் ஒரு நாள் கனகம்மா பாத்திரம் தேய்த்தபடி சிருஸ்டியின் ரகசியங்கள் பற்றி குந்தவைக்கு வகுப்பு நடத்திக் கொண்டிருந்தாள். மூத்திரம் பெய்ய எழும்பி வெளியே வந்தவனைப் பார்த்ததும் இருவருக்கும் நாணமாகிப் போய்விட்டது. 'நித்திரை வரவில்லையா ராசா ' என்று கேட்டுச் சமாளித்தாள் கனகம்மா.
மெசினில் இருந்து களுவிய பாத்திரங்களை வெளியியே எடுத்து வைத்த குமரன், புதிதாக அழுக்குப் பாத்திரங்களை அதன் வாயில் திணித்து ஓட விட்டுவிட்டு, மீண்டும் சன்னல் அருகே வந்தான். இப்போதும் கனவுச் சூரியன் மலைமேல் சிரித்துக் கொண்டிருந்தது. சூரியனுக்குக் கீழே மலையில் புதிதாக ஒரு இந்துக் கோவில் இருந்தது. 'ஐயோ எனக்குத் தீர்ப்புநாள் வந்து விட்டது ' என்று குமரன் பரபரப்படைந்தான்.
வீட்டில் இருந்து உணவு விடுதிக்கு வரும் வளியில் ஒரு கிறிஸ்தவத் தேவாலயம் உள்ளது. ஒரு சமயம் அந்தத் தேவாலயத்துக்குப் போன அவன் கடவுளுடன் கூடப் பேசியிருக்கிறான். 'என்னை விசாரித்து தண்டனை வளங்கிடு ' என்று முழங்காலில் இருந்து வேண்டுதல் செய்திருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் 'என்னைச் சிலுவையில் இருந்து இறக்கிவிடு ' என்று கடவுள் அவனைக் கேட்டுக் கொள்வார். ஒருமுறை கடவுளுக்கு உதவப் போனவனை கோவிலின் காவல்காரன் பிடித்துக் கொண்டான். கடவுளைச் சிலுவையில் இருந்து இறக்கினால் சேச்சின் வருமானம் போய்விடுமென்று காவல்காரன் கவலைப் பட்டிருக்க வேண்டும். காவல் காரனின் பிடியில் இருந்தபோதே 'கடவுளே எனது பேயைத் துரத்திவிடு ' என்று அவன் கத்தினான். 'நீ என்னைக் காப்பாற்று, உன்னை நான் காப்பாற்றுகிறேன், ' என்பதுதான் குமரனின் நிலைபாடு. 'குந்தவையின் சிதைந்த கருவும், நாகலிங்கத்தின் பேராசையும்தான் உன்னைப் பிடித்த பேய்கள் ' என்று கடவுள் சொல்லி முடிக்க முன்னமே கோவில் காவல்காரன் குமரனை முற்றத்துக்கு இழுத்து வந்து விட்டான்.
மலையில் தெரிந்தது இந்துக் கோவில். இந்துக் கடவுளர்களுக்கு தன்னைப் பிடித்த பேய்களை துரத்துகிற கெட்டித்தனம் இருக்குமென குமரனுக்குத் தோன்றியது. மீண்டும் திரும்பிப் போய் பாத்திரம் கழுவும் மெசினுக்கு வழமையான பணிவிடைகள் செய்து விட்டு சன்னலண்டை வந்தபோது சூரியனும் இந்துக் கோவிலும் மறைந்து விட்டிருந்தன. உணவு விடுதியில் ஆட்களும் சந்தடியும் குறைந்து காணப்பட்டது.
7
பல்கலைக்கழகத் தேர்வு எழுதி முடித்த வசந்த கால நாட்கள் குமரனுக்கு ஞாபகம் வந்தது. அது அவனைச் சுற்றித் தேவ தூதர்களும் தேவதைகளும் இறகு கட்டிப் பறந்து திரிந்த காலம். பரீட்சை முடிவுகள் எப்படி அமையுமோ என்கிற விசாரம் இருந்தது. கமலியைப் பிரிந்து வெளிநாடு செல்வது இனியும் தவிர்க்க இயலாது என்கிறதை அவன் உணர்ந்தான். பிரிவின் தவிர்க்க இயலாமையை கமலியும் உணர்ந்தாள். அவளது நெஞ்சு துணுக்குற்று நார் நாராக உடைந்தது. எதற்கும் துணிந்தவளாக கமலி ஒத்துழைக்கத் தொடங்கியதில் இருவருமே கவலை மேகங்களுக்கு மெலே சுடர்ந்த இன்பத்துள் சிறகு கட்டிப் பறந்தார்கள். காலம் தனது திசையில் மட்டுமே நகர்ந்து செல்கிறது.
குமரனது பல்கலைக் கழக சகா ஒருவன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டான். இது நடந்து ஒரு வாரம் ஆவதற்குள்ளேயே அவனது தெருவைச் சேர்ந்த, ஒரு வருடத்துக்குமுன் சோற்றுப் பானைக்குள் கடிதம் வைத்துவிட்டுக் காணாமல் போயிருந்த ஒரு இளைஞன் மின் கம்பத்தில் செத்துக் கிடந்தான். அவன் சார்ந்திருந்த போராளி இயக்கத்துள் உட் கட்ச்சிப் பிரச்சினை என்று கதைக்கப் பட்டது. இச் சம்பவங்களால் இளைஞர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சம் அடைந்தார்கள்.குமரனது பாதுகாப்புக்கு வெளிநாட்டுப் பயணம் மட்டுமே உத்தரவாதமென கனகம்மா ஒரேஅடியாக அழுது கொட்டினாள். நாகலிங்கமோ அவனது பாதுகாப்பு, குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பு என்கிற இரண்டு மாங்காய்களையும் ஒரே கல்லில் வீழ்த்துவதில் குறியாகி அலைந்தார். இது அவன் கனடாவிலோ அல்லது மேற்க்கு ஐரோப்பிய நாடு ஒன்றிலோ அகதியானால் மட்டுமே சாத்தியம்.
குமரனது மனப் பதட்டங்களுக்கு பல காரணங்கள் இருந்தன. பரீட்ச்சைப் பெறுபேறுகள் எப்படி அமையுமோ, வெளிநாட்டுக்கு ஆட்களை அகதிகளாக அனுப்புகிற பயண முகவர்கள் காசை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார்களோ என்பது போன்ற வளமையான ஏக்கங்களைவிட வெளிநாட்டுப் பயணத்துக்குமுன் ஒருதடவையாவது கமலியுடன் நிறை கலவிச் சுகம் தேடிய மனசின் துக்கம் பெரிதாக இருந்தது. யாரவது நண்பர்கள் வீட்டில், ஒரிரவேனும் தங்கிவிடுகிற கோரிக்கை, கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல் கமலியிடம் எடுபடவில்லை என்பதைக் குமரன் கண்ணீரோடு உணர்ந்தபோது அதிஸ்டம் வீடு தேடி வந்தது.
கனடா போகவிருந்த அவனது பல்கலைக் கழக சகா சிவலிங்கம் திடாரென ஒருநாள் அவனைத் தேடி வந்தான். 'மச்சான் என்னை வழி அனுப்ப வீட்டில் எல்லோரும் கொழும்புக்கு வருகினம். நீதான் எங்க வீட்டையும் நாயையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ' இது சிவலிங்கத்தின் விண்ணப்பமாக இருந்தது. குமரன் அந்த அமவாசை இருட்டில் சிவலிங்கத்தின் வீட்டுக்கு கமலியை அழைத்துச் சென்றான். அவள் பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியில் தங்கியிருந்ததால் எல்லாம் இலகுவாயிற்று. கமலிக்கு தெரு நீழ வியர்த்துக் கொட்டியது. நெஞ்சத் திகிலும்
உடலின் இன்ப வேதனையும் அவளைச் சுட்டெரித்தது. தலைக்குமேல் கனவுப் பிரக்ஞையுள் மஞ்சள் மஞ்சளாக சணல் பூக்கள் அசைந்தன.
தெரு நாய்கள் குரைத்த போதெல்லாம் குமரன் கமலியின் கவசமாக நடந்தான். ஒரு சினிமாத் தனமான வெற்றிப் பெருமிதத்தில் அவன் திழைத்துப்போய் இருந்தான். கமலிக்குப் பெருமிதம் ஏதுமில்லை. இன்பக் கனவுகளிலும்கூட தன்னை இழந்து போகிற உணர்வும் கருப் பயமும் அவளை நிலத்தில் நடக்க வைத்தன. தவிர்க்க இயலாது வரவிருந்த பிரிவினாலும் அவள் உருகிப்போய் கண்ணீர் வடித்தாள்.
கமலி அழாதே, பயப்படாதே , தயவு செய்து என்னை நம்பு , நான் கட்டாயம் உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணையும் தொடமாட்டேன் என அவன் வழி நீழ வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு வந்தான்.
சிவலிங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்தபோது, கமலியின் கண்கள் பார்க்குமிடமெல்லாம் மஞ்சள் சணல் பூக்களாக நிறைந்து அசைந்தன. கமலியின் நினைப்பில், குமரன் சுகனைபோலவும் தோன்றியது சுகம் செய்தது.
சுகன் ஒரு அழகிய பாடும் பறவையைப் போல கமலிக்குமேல் குந்திவிட்டுப் பறந்து போய்விட்ட ஒரு பயல். அவன் சின்ன வயதில் இருந்தே கமலிக்குத் தெரிந்த பயல்தான். பின்னர் காணாமல் போயிருந்தவன் கொழும்பில் படிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு மீண்டும் ஊருக்கு வந்திருந்தான். நல்ல பிள்ளை மாதிரி ஒருமுறை கமலியின் வீட்டுக்கு வந்து தேனீரும் அருந்திவிட்டுப் போனான். அன்று கமலியின் அம்மா கமலியையும் சுகனையும் பேசவிடவில்லை. தானே முன்னுக்கு நின்று சுகனை உபசரித்து திருப்பி அனுப்பி வைத்தாள். மறுநாள் மாலை கமலியின் அம்மா பால் மாடு சாய்க்க வெளியே போனபோது கமலி வீட்டின் பின்புறமாக நின்று காற்றில் சணற் பூக்கள் அசைந்தாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு திடுப்பென வந்த சுகன் கேட்டுக் கேள்வியில்லாமல் கமலியின் கைகளைப் பற்றினான். மிரண்டுபோன கமலி கைகளை உதறிவிட்டு திமிறிப் பாய முனைந்தாள். சுகன் கமலியின் கால்களைப் பிடித்துக் கொண்டு இரந்தான். அதன்பின் கண் இமைக்கிற நேரத்துக்குள் அவன் கமலியை பூத்து மஞ்சள்க் கடலாகக் கிடந்த சணல் தோட்டத்துக்குள் கிடத்தி விட்டான். கமலியின் கூடப் பிறந்த தற்க்காப்பு உணர்வும்
கரு அச்சமும்கூட கனவுகளுக் குள்ளும் இன்ப அந்தரங்களுக் குள்ளும் மூழ்கிப் போயின. இனம் புரியாத சுகங்களை நிரந்தரமாகவே அவளது மேனியில் சுகன் பச்சை குத்தி விட்ட போதெல்லாம் அவளுக்கு வானமாகவும் தரையாகவும் தெரிந்தவை சுற்றிவர அசைந்தாடிய சணல் பூக்கள்தான். பின்னர் சுகனின் குடும்பம் முழுவதுமே கொழும்புக்குப் போய்விட்டது. அதன்பின் கமலிக்கு தொடும் சுகம் கிட்டியது பல்கலைக்கழகத்தில் குமரனின் அரவணைப்பில்தான்.
மறுநாள் காலை விடிந்தபோதே குமரனது வசந்த காலங்கள் முடிந்து விட்டிருந்தன. விழித்தபோது காற்றில் செனாய் வாத்தியத்தின் இசையில் சகானா இராகம் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது.
'யாரோ இயக்கப் பெடியள் செத்துப் போயிற்றாங்கள் ' என்று சொல்லியபடி குமரன் எழுந்து ஒன்றுக்குப் போய்வந்தான். பாவங்கள் என்றபடி அவனை மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டு அவனது நெஞ்சுள் புதைந்தாள் கமலி.
சற்றைக் கெல்லாம் இரும்புப் படலை திறக்கப் படுகிற சத்தத்தைத் தொடர்ந்து நாய் குரைக்கத் தொடங்கியது. அது யாழ்ப்பாணத்து நாய்கள் போர் உடை அணிந்தவர்களைப் பார்த்து குரைக்கிற குரைப்பு. பதைத்துப்போய் எழுந்த குமரன் சாரத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தான்.
துப்பாக்கியோடு சில போராளி இளைஞர்கள் முற்றத்தில் நின்றார்கள். ஒருவன் துண்டுப் பிரசுரம் ஒன்றை குமரனிடம் தந்தான். வேறு சிலர் வீட்டுக்குப் பின்புறமிருந்து குலை போட்ட வாழை மரமொன்றை வெட்டித் தோழில் சுமந்து கொண்டு வந்தார்கள். வீதி சோடிக்கிறோம் என்றபடி அவர்கள் வாழை மரத்துடன் வெளியேறியபோது குமரனுக்குச் சற்று கோபம் வந்தது. பின்னர் அவன் கையிலிருந்த துண்டுப் பிரசுரத்தை விரித்தான். முதுகில் கண கணப்பாக முலைகள் தேய்பட கமலி பின்னுக்கு வந்து நின்றாள். ஐயோ என்று குமரன் அலறினான். கமலி அதிர்ந்து போனாள். பின்னர் அவளும் குரல் எடுத்து அழத் தொடங்கினாள். அஞ்சலி துண்டுப் பிரசுரத்தில் குமரனின் தம்பி சுரேஸ் இராணுவ உடையில் எழுந்து நின்றான். படத்தின் கீழ் மேஜர் பகத்சிங் (சுரேஸ்) திண்ணவேலி, மலர்வு : 5- 6- 1968 வீர மரணம் 6- 5-.1986 என்றிருந்தது.
இப்படித்தான் அவர்களது வசந்த காலங்கள் முடிவுக்கு வந்தன. குமரன் நோர்வே நாட்டுக்கு வந்து சேர்ந்து , வேரறுந்த அகதியாகி, அன்னியப் பட்டு, உறவுகளின் பேராசைப் புதை மணலுள் கால் வைத்து, உடலும் உள்ளமும் நைந்து, இப்படிப் பேய் பிடித்தவனாகச் சிதைந்துபோனான்.
8
உணவு விடுதி மூடப் பட்டதும் தெருவில் இறங்கிய குமரன் பஸ்தரிப்பை நோக்கி விரைந்தான். இரண்டு பக்கமும் கட்டிடங்களில் வண்ண வண்ணக் கீற்றுகளாக ஒளிக் குறிகள். தெருவெல்லாம் வசந்த காலத்தின் இரவை அனுபவிக்கிற இளைய தலை முறையின் கும்மாளம். இவற்றை யெல்லாம் அனுபவிக்கிற மனித ரசனையை ஏற்கனவே அவன் இளந்து விட்டிருந்தான். சகோதரிகளது சீதனம், பெற்றோரின் பேராசை, வயசு வந்தும் காதலும் காமமும் இன்மை என்பவற்றுள் நசிந்து சிதைகிற யாழ்ப்பாணத்து அகதி இளைஞர்கள் தருகிற முதற் பலி மனித ரசனைதானே.
பஸ் தரிப்பில் யாருமில்லை. வெளியே மெல்லிய இருளும் குளிரும் தலையெடுத் திருந்தன. நான்கு குமரிகளும் மூன்று இளைஞர்களும் பியர் போத்தல்களுடன் அவனைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி தன்னைப் போலவே கபில நிறமாக இருந்ததில் அவனுக்கு சிடு சிடுப்பு ஏற்பட்டது. வெறுப்புடன் வேசி என்றவன் அந்தப் பெண் தமிழிச்சியாக இருக்க மாட்டாள் என தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
வானம் மேலும் இருண்டது. ஏன் இன்னமும் பஸ் வண்டி வரவில்லை என்பது அவனுக்குப் புரியவில்லை. மீண்டும் அவன் தனது பாவப் பட்ட வாழ்வின் நினைவுக் குழிக்குள் இடறி விழுந்தான்.
குந்தவைக்குச் சீதணமாக ஐந்து லட்சம் ரூபா அனுப்பியதுமே, அவனுக்கு கமலியை திருமணம் செய்து கொடுக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார் நாகலிங்கம். பின்னர் அவர் உனக்கு நல்ல சீதணத்தில் திருமணம் பேசி வருகிறார்கள். சீதணத்தை வாங்கிச் செல்விக்குக் கொடுத்து விட்டு அவர்களில் ஒருத்தியை திருமணம் செய்துகொள் என வலியுறுத்தத் தொடங்கினார்.
நாகலிங்கத்தை முதல் முதலாக எடுத்தெறிந்து அவன் கடிதம் எழுதியதே கமலியின் விடயத்தில்தான். 'உங்களுக்குக் காதலைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதற்கு மேலும் எங்கள் காதலுக்குக் குறுக்கே நின்றால் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வேன். ' என்று கோபமும் துணிச்சலும் மிகுந்திருந்த ஒரு தருணத்தில் கடித மெழுதி அஞ்சல் செய்தான். அதன்பின் நாகலிங்கம் வாய் மூடி மெளனமாக ஒதுங்கிக் கொண்டார். குந்தவையின் திருமணம் முடிந்த கையோடு கனகம்மா கமலியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.
எல்லாம் கனவுபோல இனித்தது. ஒரு கனவில் பசிய சோலைகளின் ஊடாக அவன் சிறகசைத்துப் பறந்தான். திடாரென விபத்தில் அகப்பட்டது வாழ்வு. செல்வியின் கடிதம் அவன் இதயத்தை ஊனப் படுத்தியது. சக மனிதர்கள் மீதான நம்பிக்கை அதிர்ந்தது. 'அண்ணா எனது பெயருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் போட்டு விட்டு நீ கமலியை திருமணம் செய்து கொள்ளலாம் ' எனச் செல்வி எழுதி யிருந்தாள். நாகலிங்கமும் தனது நெடுநாளைய மெளனத்தைக் கலைத்து செல்வியின் கடிதத்தின் கீழே 'அவள் மூர்க்கத்தோடு இருக்கிறாள். எனக்குப் பயமாக இருக்கிறது.
எதும் செய்து விடுவாள் ' எனக் கிறுக்கியிருந்தார். எதுவும் செய்வதென்பது தற்கொலை செய்தல், போராளியாக இயக்கத்துக்கு ஓடுதல், குடும்பத்துக்கு அவமானம் விளைவிக்கக் கூடிய மாதிரியான சாதி தாழ்ந்த காதல் திருமணம் செய்து கொள்ளுதல் என பல்வேறு அர்த்தங்களாக முடிச்சு அவிழ்ந்ததில் குமரன் பதறிப் போனான்.
செல்விக்கு ஏற்கனவே தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனோடு கடிதத் தொடர்பு இருந்தமை வீட்டில் கண்டு பிடிக்கப் பட்டதும் கட்டுக் காவல் அதிகரிக்கப் பட்டதும் குமரனுக்கு ஞாபகத்தில் வந்தது. அதன் பின் இயக்கத்துக்கு ஓடி விடவும் அவள் எத்தணித் திருக்கிறாள். தன்மீது அனுதாபம் இல்லாத ஒருவனாகவும் காதலைப் பற்றிய மனிதப் புரிந்துணர் வில்லாத ஒருவனாகவுமே அவள் குமரனைப் பார்த்தாள். 'வாழ்தல் என்பது வாழ்வைப் பணயம் வைத்து அந்தஸ்துக்காக ஆடும் சூதல்ல, அண்ணாவோடு நீ வாழ்வை அனுபவிக்க முடியும் என்று வீன் கனவு காணாதே ' என்று கமலிக்குக் கூட செல்வி புத்திமதி கூறி எழுதியிருக்கிறாள்.
செல்வியின் கடிதம் குமரனை மட்டுமல்ல கமலியையும் கனகம்மாவையும் கூட கிழித்துப் போட்டது. இது செல்வியின் வேலையல்ல , அந்த சுயநலம் பிடித்த கிழவனின் சதியென நாகலிங்கத்தைத் திட்டி கனகம்மா கடிதம் எழுதியிருந்தாள். 'கமலியை உனது கையில் பிடித்துத் தராமல் நான் நான் வீடு திரும்ப மாட்டேன். உனக்காக சென்னையில் கமலியுடன் காத்திருப்பேன். ' என எழுதி சிவப்பு மையில் அடிக் கோடு வேறு போட்டிருந்தாள். அடிக்கோடு கமலியின் வேலை என்பதைக் குமரனும் புரிந்து கொண்டான்.
கமலியைத் திருமணம் முடித்து, பின் இருவருமாக வேலை செய்து, ஒரு வருடத்துக்குள்ளேயே செல்வியின் சீதணம் ஐந்து லட்சம் ரூபாவும் அனுப்பி வைப்பதாக குமரன் எழுதிய கடிதத்துக்கு வீட்டில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.
தனது மனிதக் கனவுகளைப் புதைத்து விட்டு இரவும் பகலும் வேலை வேலை யென்று சிதைந்து போகிற அவலம் அவனது இருப்பில் இப்படித்தான் தொற்றிக் கொண்டது. 'எனக்கென்று இந்த உலகில் இருப்பதெல்லாம் அம்மாவும் கமலியும்தான் ' என அவன் தனது நாட் குறிப்பில் எழுதினான். 'மற்ற எல்லோரும் போன பிறவியில் எனக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள். இந்தப் பிறவியில் வெனிஸ் நகரத்து சைலொக் போல உறவுகளாகப் பிறந்து வந்திருக்கிறார்கள்.
சம்பந்தப் படுகிறவர்களால் சக மானிடர்களாக அடையாளப் படுத்தப் படுகிறதுதான் பாக்கியம். இதனாலேயே மனித இருப்பு வாழ்வாகச் செழித்து அர்த்தப் படுகிறது. நோர்வே வந்து சேர்ந்ததில் இருந்தே குமரன் இந்த வரப்பிரசாதத்தை இழந்து போனான். இதுதான் துர் அதிஸ்டம். குமரன் மட்டுமல்ல புற்றீசல்களாகப் பறந்துபோய், பணம் பண்ணக் கூடிய நாடுகளில் அகதிகளாக விழுந்து கிடக்கிற ஈழத் தமிழர் பலரது துர் அதிஸ்டமும் இதுதான். தன்னை, தனது மனித முகத்தை சிதை சிதை யென்று சிதைத்து ஐந்து லட்சம் ரூபா திரட்டி ஊருக்கு அனுப்பியபோது குமரனின் தலையில் புதிய இடியொன்று விழுந்தது.
அதிற்சி தருகிற சென்னைச் செய்திகளும் அதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகம் இலங்கைத் தமிழர்களுக்கு விசா வழங்குவதை திடாரென நிறுத்தி வைத்ததும் அவனது கனவுகளை நிர்மூலமாக்கியது.
'ஐயோ நான் என்ன பாவம் செய்தேன் ' என பஸ்தரிப்பில் நின்றபடி குமரன் வாய்திறந்து அழத்தொடங்கினான்.
9
பஸ்வண்டி ஓடத் தொடங்கியது. அந்த நள்ளிரவிலும் தெருக்களில் பெண்களின் கூட்டம் நிறைந்திருந்ததை அவன் பார்த்தான். ஒஸ்லோ நகரத்தின் அழகே அந்தப் பாதுகாப்புத்தான்.
நாளைக்கே மீண்டும் இந்தியத் தூதரகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான்.
விசா கிடைத்தால் சிதம்பரம் கோவில் உண்டியலில் இந்தியப் பணம் பத்தாயிரம் போடுவதாகவும் கதிர்காமத்துக்கு ஆயிரம் ரூபா தபாலில் அனுப்புவதாகவும் பஸ்ஸில் இருந்துகொண்டே தாராளமாக நேர்த்தி வைத்தான். இத் தொகை இரண்டு மாதங்களுக்கு முன்னம் சிதம்பரத்துக்கு ஐயாயிரமும் கதிர்காமத்துக்கு ஐந்நூறும் என்றிருந்தது. பணம் தேடுகிற சக்க்தியைத் தவிர ஏனையவற்றை எல்லாம் ஏற்கனவே இழந்து போயிருந்தவனுக்கு முடிந்ததெல்லாம் அவ்வளவுதான்.
கமலியை நோர்வேக்கு கூப்பிட்டு விட்டால் தனது துயரங்கள் எல்லாம் தீர்ந்துவிடுமென அவன் மனப்பூர்வமாக நம்பினான்.வேலை முடிந்து வீடு திரும்புகிற போது கமலி வீட்டில் இருப்பாள். எச்சில் பாத்திரங்கள் எல்லாம் கழுவி அடுக்கி இருக்கும். உணவு விடுதிக்கு வருகிற நார்வீஜியரைப் போல சாப்பாட்டு மேசையில் போய் உட்கார வேண்டியதுதான். கமலி செல்லம் கொஞ்சிக் கொஞ்சி அவனுக்கு உணவு பரிமாறுவாள்.
'பெண்கள் குந்தியிருந்து அரட்டை அடிக்கிறது எனக்குப் பிடிக்காது ' என்று அவன் அரற்றியபோது பஸ்வண்டியின் முன் இருக்கையில் இருந்த இளைஞர்கள் அவனை திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். கமலி வந்த உடனேயே ஒரு நல்ல தொலைக் காட்சிப் பெட்டியும் வி.சி.ஆரும் வாங்க வேண்டும் என்று அவன் மீண்டும் உறுதி எடுத்துக் கொண்டான்.
எந்தத் திரைப்படமும் சென்னையில் வெளிவந்த கையோடேயே சாயம் போன திருட்டு வீடியோக்களாக ஐரோப்பாவில் நடமாடும். கமலி வந்தபின் அடிக்கடி புதிய திரைப்படங்கள் பார்க்கலாம். தினசரி செல்லம் கொஞ்சி, கலவி முடிந்த பின்னும் சினுங்கச் சினுங்க இரவு முழுவதும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கலாம் என்ற கனவுலகில் மூழ்கி இருந்தபோது கமலி முலைகள் நசிய முதுகில் சாய்ந்திருப்பது போன்ற பிரமை குமரனுக்கு ஏற்பட்டது. பிரக்ஞை மீண்டபோது குமரன் தனது திருமணம் தள்ளிப் போனதற்காக அப்பாவையும் தங்கையையும் வசை பாடினான்.
பஸ்ஸில் இருந்த இளைஞர்கள் அடிக்கடி குமரனை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
10
அது குமரன் வழக்கமாகப் பயணம் செய்கிற பஸ் வண்டியாகிப் போனதில் சாரதியே சரியான பஸ் தரிப்பில் பஸ்ஸை நிறுத்திவிட்டுக் குரல் கொடுத்தான். அவன் தனது கனவுகளில் இருந்து மீண்டு, பஸ்ஸினால் கீழே இறங்கச் சற்று நேரம் எடுத்தது. நள்ளிரவிலும் சூரியன் மறையாது நிற்கிற காலமது. எனினும் வானில் பரவி இருந்தது அதிகாலை வெளிச்சம்தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். இப்படி ஆறுதலாக நின்று வானத்தையும் பூமியையும் பார்த்து ஐந்து வருடங்களாகிவிட்டன. அது அவன் நோர்வே வந்து சேர்ந்த வருடம். மொழி படிப்பதற்காக முறைசாராத மக்கள் கலூரி ஒன்றில் மாணவனாகி இருந்தான். அதுதான் அவன் மனிதனாகி இருந்த இறுதி வருடம்.
அந்த வருடம்கூட 'குமரன், அங்கு உனக்குப் படிப்பதற்க்கு அறுபதாயிரம் குரோனர் கடன் தருவார்கள். பணத்தை எடுத்து வீண் செலவு கிலவு செய்து விடாதே. பணத்தையும் உன் வரவு செலவுக் கணக்கையும் உடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும். ' என நாகலிங்கம் கடிதம் எழுதியிருந்தார்.
கடனாகக் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை வீட்டுக்கு அனுப்பிய போதும் அந்த வருடதின் வசந்த்தையும் கோடையையும் அனுபவிக்க பண முடையும் கமலியின் பிரிவும் அவனுக்குத் தடையாக இருக்கவில்லை.
11
ஒற்றையடிப் பாதையில் இறங்கி வீட்டை நோக்கி நடந்த போது கும்ரன் பிசாசு தன்னைப் பின் தொடர்ந்து வருவதை உணர்ந்தான். திரும்பிப் பாராமலே தன்னைத் தொடர்வது ஒரு பெண் பிசாசு என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். காற்றில் மிதந்து வந்த நறுமணம் சிறு வயதில் கேள்விப்பட்ட மோகினிப் பிசாசுகளின் கதைகளை குமரனுக்கு நினைவு படுத்தியது.
எதிரில் பூத்திருந்த அப்பிள் தோட்டம் இன்னமும் இருண்டு கிடந்தது.
(முற்றும்)
Friday, September 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment