Monday, August 20, 2007

உயிர்த்தேன்

உயிர்த்தேன்
வ.ஐ.ச.ஜெயபாலன்

காலப் பாலை நடுவினிலே
வினோதங்கள் வற்றி
உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே
வாழும் கனவாக என் முன்னே
வளரும் சிறு நதியே.
உன் தோழமையின் பெருக்கில்
துயர்கள் கரையுதடி
வாழத் துடிக்குதடி கண்ணம்மா
என் வார்த்தைகள் காவியமாய்

கூதிர் இருட் போர்வை உதறி
குவலயம் கண் விழிக்க
போதியோடு இலை உதிர்த்த இருப்பும்
புன்னகைத்தே துளிர்க்க
மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன்
மண்ணைப் புணருகின்றான்.
மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா
மூச்சால் உயிர் மூட்டி.

கடைசித் துளியும் நக்கி
காலி மதுக் கிண்ணம் உடைத்து
என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன்.
நீ கள்நதியாக நின்றாய்.
உயிர்த்தும் புத்துயிர்த்தும்
இந்த உலகம் தொடர்வதெல்லாம்
உன் பொற்கரம் பற்றியன்றோ .
மாண்டவர் மீள்வதெல்லாம் பெண்ணே நின்
மந்திரத் தொடுகையன்றோ .

பெண்களே பூமியர்கள்
ஆண்கள் நாம் பிற கோளால் வந்தவர்கள்
உன்னைப் புரியாமல் கண்ணம்மா
இந்த உலகம் புரிவதில்லை

No comments: