Saturday, August 18, 2007

என் கதை

அவள் தனி வனமான ஆலமரம்.
நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.
என்னை முதன் முதற் கண்டபோது
நீலவானின் கீழே அலையும்
கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.
நானோ அவளை
கீழே நகரும் பாலையில் தேங்கிய
பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.

ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி
ஜாடை காட்டினாள்.
மறுநாள் அங்கிருந்தது என் கூடு.
இப்படித்தான் தோழதோழியரே
எல்லாம் ஆரம்பமானது.

தண்ணீரை மட்டுமே மறந்துபோய்
ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்
பாலை வழி நடந்த காதலர் நாம்.
அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.
நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.
சிறகுகளில் மிதக்கும் எனக்கோ
நிலைத்தல் இறப்பு.

மண்ணுடன் அவள் எனை
வேரால் இறுகக் கட்ட முனைந்தும்,
நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்
எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.
உண்மைதான் அவளை
நொண்டியென்று விரக்தியில் வைதது.
முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
கண்ட மரம் குந்தி, ஓடுகாலி
மிதக்கும் நரகல் என்றாள்.
ஒரு வழியாக இறுதியின் இறுதியில்
கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்
சமரசமானோம்.

மாய ஊறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு.
நம் காதலாய் அரங்கேறியதோ
உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்
என்றோ எழுதிய நாடகச் சுவடி.

இப்போது தெளிந்தேன்.
சந்திக்கும் போதெலாம்
என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
"ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.
"மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்"
என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்
என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டும்தான்."

இப்படித்தான் தோழதோழியரே
ஒரு மரமும் பறவையும் காவியமானது.

5 comments:

காயத்ரி said...

ஜெயபாலன் உங்க கவிதை உறைய வெச்சிடுச்சு.. புது பதிவரா நீங்க? உங்கள் பின்னூட்டம் அழித்து விடும் அளவுக்கு மோசமானதில்ல.. என் கிண்டல் புண்படுத்தியிருந்தால் மன்னிச்சுக்குங்க.. உங்க அடுத்த கவிதைக்கு காத்திருக்கேன்.

ஜெயபாலன் said...

நன்றி காயத்திரி. கவிதைக்குப் பழசு வலைப் பதிவுக்குப் புதிசு. உங்கள் கவிதை மேம்படும் என்கிற விருப்பதிலேயே கருத்து எழுதினேன்.

Anonymous said...

Hi, when you post a poem in your blog, SELECT 'EDIT HTML' and type or paste your posts there. Otherwise you will lose the right format of your poems.

ஜெயபாலன் said...

நல் இதயம் கொண்ட பெயரிலித் தோழர்|தோழியருக்கு,
மிகவும் நன்றி. இன்று புதிதாக ஒன்று கற்றேன். வலைக் குழுமங்களில் சேர விருப்பம் அதுபற்றியும் அறியத்தாருங்கள். உங்கள் பெயர் காணவும் விருப்பம்.

கொண்டோடி said...

ஜெயபாலன்,
வலைப்பதிவுலகு உங்களை வரவேற்கிறது.
தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டியாகச் செயற்படும் தமிழ்மணத்தில் உங்கள் வலைப்பதிவையும் இணைத்துவிடுவது சிறந்தது.
இந்தப் பக்கத்துக்குச் சென்று உங்கள் வலைப்பதிவு URL ஆன http://poetjayapalan.blogspot.com/ ஐ சரியான பெட்டியில் கொடுத்து மேலதிக விவரங்களையும் அளித்தீர்களென்றால் அவர்கள் உங்கள் வலைப்பதிவை இணைத்து விடுவார்கள்.

~~~~~~~~~~~~~~~~
உங்களின் 'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்' மற்றும் 'நெடுந்தீவு ஆச்சிக்கு' ஆகிய படைப்புக்கள் மிகமிகக் கவர்ந்தவை.